சென்னை: சென்னையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் அக்கட்சி தலைவரும், நடிகருமான விஜய் தலைமையில் இன்று கூடுகிறது.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை (Tamilaga Vettri Kazhagam) 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதியன்று தொடங்கினார். ஏற்கனவே கட்சியின் பெயர் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட நிலையில், கட்சி குறித்து தனது ரசிகர்கள் மூலம் மக்களிடையே பிரபலப்படுத்தி வருகிறார். அதன் தொடர்ச்சியாக, தமிழக வெற்றிக்கழகத்தின் முதன் அரசியல் மாநாடு 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விக்கிரவாண்டியில் முதல் மாநாடு நடந்தது. நடைபெற்றது. அப்போது கட்சியின் கொள்கை, சின்னம் குறித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதைத்தொடர்ந்து, கட்சியின் இரண்டாம் ஆண்டு விழா மாமல்லபுரத்தில், 2025ம் ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி நடந்தது.
இந்த நிலையில், இன்று (மார்ச் 28) சென்னை திருவான்மியூரில் உள்ள ராமசந்திரா கன்வென்ஷன் சென்டரில் த.வெ.க., முதல் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் 2 ஆயிரம் நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.
தற்போது தமிழ்நாட்டில் பரபரப்பாக பேசப்படும் தொகுதி மறுவரையறை, ஜாதிவாரி கணக்கெடுப்பு, மும்மொழி கொள்கை விவகாரம் தொடர்பாக இன்றைய தவெக பொதுக்குழுவில் விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், ஏற்கனவே அறிவித்தபடி, 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தவெக வெற்றி பெறுவதற்காக நிர்வாகிகள், தொண்டர்களுக்கு விஜய் ஆலோசனை வழங்க இருப்பதாகவும், 2026 தேர்தல் தொடர்பாக முக்கிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. கூட்டத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் காலை மற்றும் மதிய உணவு வழங்கப்பட இருக்கிறது.
இன்று பொதுக்குழு கூட உள்ள நிலையில், கடந்த முறை மாமல்லபுரத்தில் நடைபெற்ற கட்சியின் ஆண்டு விழாவில் நிர்வாகிகள் அமர்ந்து உணவு சாப்பிட முடியாத அவலம் எழுந்தது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இந்த முறை அதுபோல எந்தவொரு பிரச்சினையும் எழுந்துவிடக்கூடாது என்று, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுக்குழு கூட்டம் நடக்கும் இடத்திற்கு விஜய் காலை 7:00 மணிக்கே வந்துவிட்டார். கூட்டம் ஏற்பாடுகள், நிர்வாகிகளுக்கான உணவு ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டார்.