சேலம்: தவெக தலைவர் விஜய் சேலம் மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு பரப்பரை மேற்கொள்ள அனுமதி கோரி சேலம் மாநகர காவல்துறையிடம் மனு அளிக்கப் பட்டு உள்ளது. அதன்படி,  வரும்  13-ந் தேதி சேலத்தில் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு கூட்டம்  நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதை மாவட்ட செயலாளர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டப் பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை, பிரச்சாரம் ஆகியவற்றில் தீவிரம் காட்டி வருகின்றன. இதற்கிடையில் தவெக கட்சியை தொடங்கி உள்ள நடிகர் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்தி வருகிறார். அவரது  2025ம் ஆண்டு செப்டம்பர் 27-ந்தேதி திருச்சி அருகே  கரூர் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக  41 பேர் உயிரிழந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதையடுத்து அரசியல் கட்சி தலைவர்களின் பரப்புரை, பொதுக்கூட்டத்துக்கு கடும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இதன் பின்னர், தவெக தலைவர் விஜய் பெரிய அளவில் பிரச்சாரம் எதுவும் மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில், சேலம் மாவட்டத்தில் வரும் 13-ந் தேதி விஜய் கலந்து கொள்ளும் மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்த தவெகவினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இது தொடர்பாக, சேலம் மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் அனுமதி கோரி அந்த கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் பார்த்திபன் இன்று மனு அளித்தார்.

பின்னர் அவர், செய்தியாளர்களிடம் பேசிய பார்த்திபன்,  பிப்ரவரி 13 ஆம் தேதி மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கோரி காவல் துறையிடம் மனு அளித்துள்ளோம். சேலம் சீலநாயக்கன்பட்டி மற்றும் மகுடஞ்சாவடி ஆகிய இரண்டு இடங்களில் ஏதாவது ஒன்றில் நிகழ்ச்சியை நடத்த அனுமதி கேட்டுள்ளோம். இந்த பகுதிகளில் ஏற்கெனவே ஜெயலலிதா பிரச்சாரம் செய்துள்ளார்.

எங்களிடம் மனுவை பெற்றுக் கொண்ட காவல் துறையினர், அதனை பரிசீலனை செய்து அனுமதி அளிப்பது குறித்து தெரிவிப்பதாக கூறினர். நிச்சயம் வரும் 13 ஆம் தேதி மக்கள் சந்திப்பு கூட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கலந்து கொள்வார்.

கூட்டம் நடத்துவதற்கு என்னென்ன விதிமுறைகள் உள்ளதோ, அதையெல்லாம் பின்பற்றுவோம் என மனுவில் தெரிவித்துள்ளோம். இந்த முறை நிச்சயம் சேலத்தில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெறும்” என்றார்.

தொடர்ந்து பேசிய பார்த்திபன், “காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு தருவோம். கூட்டத்திற்கு வருவோர் எண்ணிக்கை குறித்த விவரத்தையும் காவல் துறையிடம் தெரிவித்துள்ளோம். விஜய் மக்கள் இயக்கமாக இருந்த போதே, சேலத்தில் மிகப் பிரமாண்டமாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை நடத்தியுள்ளோம். பல்வேறு போராட்டங்கள், பொதுக்கூட்டங்களையும் நடத்தியுள்ளோம். எங்களால் வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்பட்டதாக சரித்திரமே கிடையாது.

காவல் துறை விதிக்கும் நிபந்தனைகளை கடைபிடித்து தமிழ்நாடே பாராட்டும் வகையில் கூட்டத்தை நடத்தி காட்டுவோம். தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், ஒரே நாளில் 10 இடங்களில் கூட பேசுவதற்கு தயாராக உள்ளார். காவல் துறை அனுமதி கொடுத்தால் கண்டிப்பாக அதை செய்வோம்.

கடந்த முறை கார்த்திகை தீபம் என்பதால் கேட்ட தேதியில் அனுமதி வழங்க முடியாது என்று காவல் துறை கூறியது. அது சரியானது தான். இந்த முறை அது போன்று எதுவும் சொல்லவில்லை. கண்டிப்பாக அனுமதி கிடைக்கும்” என்றும் பார்த்திபன் கூறினார்.

[youtube-feed feed=1]