திருவள்ளூர்: தமிழகத்தில்  அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக திருவள்ளூரில்  நடிகர் விஜயின் தவெக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உலக மகளிர் தினத்தையொட்டி நடிகர் விஜய் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில்,  பெண்கள் பாதுகாப்பாக இருக்கும்போதுதானே சந்தோஷமாக இருக்க முடியும். அப்படி எந்த பாதுகாப்பும் இல்லாதபோது சந்தோஷம் இருக்காது தானே! அப்படி நீங்கள் நினைப்பது எனக்குப் புரிகிறது. 2026-ம் ஆண்டு, நீங்க, நான் எல்லோரும் சேர்ந்து பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிய திமுகவை மாற்றுவோம்.  அதற்கு மகளிர் தினமான இன்று நாம் எல்லோரும் சேர்த்து உறுதியேற்போம். உங்களுடைய எல்லா சூழலிலும் ஒரு மகனாக, அண்ணனாக, தம்பியாக, தோழனாக நான் உங்களோடு நிற்பேன் என்று கடுமையாக சாடியிருந்தார்.

இதைத்தொடர்ந்து,   தமிழகத்தில் நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக தவெக சார்பில் ஆங்காங்கே போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, இன்று திருவள்ளூர் தெற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில், தமிழகத்தில் நடைபெறும் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளில், பேருந்து நிலையங்களில் இரயில் நிலையங்களில், மருத்துவமனைகளில் நடக்கும் பாலியல் வன்கொடுமை களைக் கட்டுப்படுத்தத் தவறியதாக திமுக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் 50 -க்கும் மேற்பட்ட தவெக நிர்வாகிகள் பங்கேற்றனர்.