சென்னை: தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தலைவர் விஜய் மார்ச் 28-ந்தேதி சென்னையில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.  ‘விஜய்  சென்னை  பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவார் என தகவல்கள் பரவி வரும் நிலையில், அவரது தேர்தல் பிரசாரமும் பெரம்பூரில் தொடங்குகிறது.

ஏற்கனவே தேர்தல்  பிரச்சாரம் மேற்கொள்வதற்காக, தவெக சமர்ப்பித்திருந்த நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. அக்கட்சியின் தலைவர் விஜய், பொதுச் செயலாளர் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், அருண்ராஜ், சி.டி.ஆர். நிர்மல் குமார், நாஞ்சில் சம்பத், ராஜ்மோகன் உள்ளிட்ட 20 முக்கிய நபர்கள் நட்சத்திரப் பேச்சாளர்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் வரும் 28-ம் தேதி சென்னை பெரம்பூரில் இருந்து தனது முதல் கட்டத் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். இதற்காக பெரம்பூரில் பிரம்மாண்டமான தேர்தல் பணிமனை அமைக்கப்பட்டு வருகிறது. தனது பிரச்சாரத்தின் போது கொடுங்கையூர் மற்றும் மூலக்கடை பகுதிகளில் பொதுமக்களைச் சந்தித்து விஜய் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட உள்ளார்.

.இதனிடையே ஒரே நாளில் 5 தொகுதிகளில் வாகன பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கோரி த.வெ.க. சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அனுமதி கோரி வழங்கப்பட்டுள்ள மனுவில், காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், அண்ணாநகர், விருகம்பாக்கம் ஆகிய 5 தொகுதிகளில் வாகன பிரசாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு இடத்திலும் 3 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

இதனிடையே, நாளை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தவெக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. அப்போது 234 தொகுதிகளுக்குமான தவெக வேட்பாளர்களை அறிவிக்க இருக்கும் விஜய், மாநிலம் தழுவிய தனது முழுமையான பிரச்சாரத் திட்டத்தையும் அறிவிக்க உள்ளார்.

[youtube-feed feed=1]