மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கடந்த பத்து ஆண்டுகளாக எதிர்க்கட்சி தலைவர் யாரும் இல்லாமல் இருந்த நிலையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மக்களவையில் பத்து சதவீதத்துக்கும் கூடுதலாக 99 எம்.பி.க்கள் உள்ளனர்.
மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியை அக்கட்சி ஒருமனதாக தேர்வு செய்தது. இதனையடுத்து எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தியை நியமிக்கக் கோரி சபாநாயகருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது.
இதனையேற்று ராகுல் காந்தியை எதிர்க்கட்சித் தலைவராக நியமித்துள்ளது. கேபினட் அமைச்சருக்கு இணையான வசதிகளுடன், நாடாளுமன்ற கட்டிடத்தில் அலுவலகம் மற்றும் உதவியாளர்களை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்திக்கு வழங்க உள்ளது.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், சிபிஐ இயக்குநர், தலைமைத் தேர்தல் ஆணையர்கள், தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவர், தலைமை விஜிலென்ஸ் ஆணையர் போன்ற அதிகாரிகளுக்கான முக்கிய நியமன நடவடிக்கைகளில் ராகுல் பங்கேற்பார்.
பிரதமர் மற்றும் ஒரு மத்திய அமைச்சர், மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் பெரும்பாலான நியமனங்களுக்கான தேர்வுக் குழுவில் இடம்பெற்றிருப்பார்கள் ராகுல் காந்தியின் கருத்தும் இந்தக் குழுவில் ஒலிக்கும் என்றபோதும் அரசாங்கத் தரப்பில் இரண்டு உறுப்பினர்கள் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்டுள்ளதற்கு நடிகர் விஜய் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
எதிர்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு… காங்கிரஸ் கட்சி அதிகாரபூர்வ அறிவிப்பு…