திருமலை திருப்பதி தேவஸ்தான புதிய ஆட்சிமன்ற குழு தலைவராக பி.ஆர். நாயுடு நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆந்திராவில் பிரபலமான TV5 தொலைக்காட்சி நிறுவனரான பி.ஆர். நாயுடு முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சொந்த மாவட்டமான சித்தூரைச் சேர்ந்தவர் என்பதும் அவருக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
24 பேர் கொண்ட இந்த குழுவில் 12 பேர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மீதமுள்ள 12 பேரில், தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் 5 பேர், கர்நாடக 3, தமிழ்நாடு 2, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த தலா ஒருவர் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மற்றும் பி. ராம்மூர்த்தி ஆகிய இருவரும் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
ஆந்திராவில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்களில் 3 பேர் சட்டமன்ற உறுப்பினர்கள் தவிர முன்னாள் மத்திய அமைச்சர் பனபாக லட்சுமி-யும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
துணை முதல்வர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியைச் சேர்ந்தவர்கள் தவிர பாஜக கட்சியினருக்கும் இதில் இடமளிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு பொறுப்பேற்றபின் திருமலை திருப்பதி தேவஸ்தான கட்டுப்பாட்டை கையிலெடுத்த நிலையில் தற்போது ஆட்சிமன்ற குழுவை முழுவதுமாக மாற்றியமைத்துள்ளதால் தேவஸ்தானத்தின் மொத்த நிர்வாகத்தையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்கிறார்.
ஏற்கனவே கலப்பட நெய் விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் கடந்த ஆட்சியில் திருமலை தேவஸ்தானத்தில் நடைபெற்ற ஊழல் விவகாரங்கள் இனி அம்பலமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.