தூத்துக்குடி:

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டம் தொடங்கியது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடிய மக்கள் மீது காவல்துறை காட்டுமிராண்டித்தனமாக துப்பாகி சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதை கண்டித்து, வணிகர்கள் சங்க பேரவை இன்று கடைஅடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி வெள்ளையன் தலைமையிலான வணிகர்கள் சங்கத்தினர்  தமிழகம் முழுவதும்  இன்று கடையடைப்பு நடத்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

தூத்துக்குடி பகுதியில் மருந்துக் கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. மற்றபடி அனைத்து கடைகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன. பேருந்துகள் எதுவும் ஓடவில்லை. ஆட்டோக்கள், டாக்சிக்கள் இயக்கப்பட வில்லை. இதனால் தூத்துக்குடி நகர சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

அரசு அலுவலகங்கள் செயல்பட்டாலும் பெரும்பாலான ஊழியர்கள் பணியை புறக்கணித்து விடுமுறை எடுத்துள்ளனர். பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மக்கள் கூட்டமாக நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை மற்றும்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தென் மாவட்டங்கள் முழுவதும் வணிகர்கள் முழு அளவில் கடை அடைப்பு  செய்துள்ளனர்.