மதுரை:
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு அறிவித்துள்ள நிவாரணம் போதாது என்றும், அதை அதிகரித்து வழங்க வேண்டும் என்று மதுரை உயர்நீதி மன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், இதுகுறித்து, இரண்டு நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகினர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களுக்கும் 10 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கும் தமிழக அரசு நிவாரணம் வழங்கி உத்தரவிட்டது.
பின்னர் அரசியல் கட்சிகளின் வற்புறுத்தலை தொடர்ந்து, துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 20 லட்சமும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு நிவாரண உதவி ரூ. 5 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு நிவாரணம் ரூ.1.5 லட்சமாகவும் அதிகரித்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, அகில இந்திய வழக்குரைஞர் சங்கச் செயலாளர் சார்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.50 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.10 லட்சமும் நிவாரணத் தொகையாக வழங்க உத்தரவிட வேண்டும் என்றும், துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு தலைமைச் செயலர், காவல்துறை டிஜிபி உட்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனு மீது நாளை மறுநாளுக்குள் தமிழக அரசு பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.