அஸ்கபட் :

த்திய ஆசிய நாடான துருக்மெனிஸ்தானில் அதிபராக இருக்கும் குர்பங்குலி பெர்டிமுகமெடோவ், அந்நாட்டின் பாரம்பரியமிக்க அலபாய் எனும் நாய் இனத்திற்கு நினைவுச் சின்னம் அமைத்திருக்கிறார்.

நாட்டின் தலைநகரான அஸ்கபட் நகரின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த நினைவுச் சின்னம், 19 அடி உயரத்தில் தங்கத்தால் ஆன சிலை என்பது குறிப்பிடத்தக்கது.

60 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட இந்த நாட்டின் பெரும்பகுதி வறண்ட பாலைவனம், இயற்கை எரிவாயு மட்டுமே முக்கிய பொருளாதார ஆதாரமாக விளங்குகிறது.

இங்குள்ள பாரம்பரிய பூர்வகுடி மக்கள் தங்கள் வெள்ளாடுகளையும், செம்மறி ஆடுகளையும் மேய்ப்பதற்கு உதவியாக மத்திய ஆசியாவின் ‘ஷெப்பர்ட்’ இனத்தைச் சேர்ந்த அலபாய் என்றழைக்கப்படும் நாய்களையும், குதிரைகளையும் வைத்திருக்கின்றனர்.

இந்த வகை நாய்கள் தங்கள் கால்நடைகளை ஓநாய்களிடம் இருந்து வெகுவாக பாதுகாப்பதால் இதற்கு ‘ஓநாய் விரட்டி’ என்றும் அந்த ஊர் மக்கள் அழைக்கின்றனர்.

இப்படி அந்த நாட்டின் பாரம்பரியத்தில் கலந்துவிட்ட இந்த நாயைப் பற்றி அதிபர் குர்பங்குலி பெர்டிமுகமெடோவ், கவிதைகள் மற்றும் கதைகள் எழுதியதோடு, இந்த வகை நாய்க்குட்டியை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு பரிசாகவும் கொடுத்திருக்கிறார்.

அலபாய் வகை நாய்க்கு நினைவுச் சின்னம் அமைத்து அதனை திறந்து வைத்த அதிபர், இந்நிகழ்ச்சியைக் காண உற்சாகமாய் சமூக இடைவெளியுடன் திரண்டிருந்த மக்களிடையே உரையாடினார்.

குர்பங்குலி பெர்டிமுகமெடோவ் அமர்ந்து செல்வது போல் குதிரைக்கும் 2015-ம் இதேபோல் ஒரு சிலையை நிறுவியுள்ளார். இந்த சிலைகளை அமைக்க எவ்வளவு செலவானது என்பது தெளிவாக தெரியவில்லை.

சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த துருக்மெனிஸ்தான் சர்வாதிகார நாடு என்பதும் குர்பங்குலி பெர்டிமுகமெடோவ் 2007-ம் ஆண்டு முதல் அதன் அதிபராக இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.