அஸ்காபத்: கொரோனா வைரஸ் என்ற வார்த்தையை யாரும் பயன்படுத்தக்கூடாது என்று துர்க்மேனிஸ்தான் அரசாங்கம் அறிவித்து இருக்கிறது.
மத்திய ஆசிய நாடுகளில் ஒன்று துர்க்மேனிஸ்தான். அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் கூட இல்லை. ஆகையால் அந்த வார்த்தையை பயன்படுத்தினால் கைது நடவடிக்கை பாயும் என்று அந்நாடு அறிவித்து இருக்கிறது.
ஊடகங்கள், பத்திரிகைகள் உள்ளிட்டவையும் கொரோனா வைரஸ் என்ற வார்த்தையை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.
அது மட்டுமல்லாமல் சாலைகளில் அல்லது வேறு பகுதிகளில் முகக்கவசம் அணிந்து யாராவது சென்றால் அவர்கள் கைது செய்யப்படுகின்றனர். அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
அதிபர் குர்பங்குலி பெர்டிமுகாம்தோவ் அரசாங்கம் சர்வாதிக்கத்தை இதன் மூலம் வலுப்படுத்துகிறது என்று குற்றச்சாட்டுகளும் முன் வைக்கப்படுகின்றன. தெற்கே துர்க்மேனிஸ்தானின் அண்டை நாடான ஈரான் கொரோனா வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.