டெல்லி: மத்தியஅரசு கொண்டுவந்துள்ள வோளண்துறை மசோதாக்களுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், நாளை வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் நாளை தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது. இதனால், பாஜக எம்பிக்கள் அவைக்கு கட்டாயம் வர வேண்டும் என கட்சி கொறடா உத்தரவிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் வேளாண் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்தது. இந்த மசோதா, விவசாயிகளின் நலனை காக்கும் என மத்திய அரசு விளக்கம் அளித்ததுள்ளது.
ஆனால், இந்த மசோதா சட்டமானால் விளை பொருட்களுக்கு குறைந்த பட்ச விலை என்பதே இருக்காது என்றும், விவசாயம் கார்ப்பரேட் கைகளுக்கு சென்றுவிடும், விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
வடமாநிலங்களில் விவசாயிகள் போராட்டங்களை அறிவித்து உள்ளனர். இந்த நிலையில், மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக கூட்டணி கட்சியான சிரோன்மணி அகாளிதளம், அமைச்சரவையில் இருந்து விலகியது.
இத்தகையை சூழலில் மசோதாவை நிறைவேற்ற மத்தியஅரசு தீவிரம் காட்சி வருகிறது. மக்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை உள்ள நிலையில், மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது.
இதனால், மாநிலங்களவையில், மசோதாவை தாக்கல் செய்ய மத்தியஅரசு தீவிரம் காட்டி வருகிறது. மாநிலங்களவையில் பாஜகவுக்கு போதிய எம்.பி.க்கள் இல்லாத நிலையில், மசோதா நிறைவேற்றப்படுவது கேள்விக்குறியாகி உள்ளது.
245 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி இன்னும் தெளிவான பெரும்பான்மை இல்லை என்றாலும், அதிமுக போன்ற கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மசோதாக்களை நிறைவேற்றி வருகிறது. அதன்படியே, வேளாண் மசோதாக்களையும் நிறைவேற்ற முயற்சி செய்து வருகிறது.
இதுதொடர்பாக மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், பிரஹ்லாத் ஜோஷி மற்றும் பியூஷ் கோயல் ஆகியோர் சிவசேனா மற்றும் என்.சி.பியில் உள்ள சில தலைவர்களுடன் பேசியுள்ளனர். இதனால், சிவசேனா பாஜகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறியுள்ளது.
மாநிலங்களவையில், பாஜகவுக்க 86 இடங்கள் உள்ளது. காங்கிரசுக்கு 40 இடங்கள் உள்ளன. அதுபோல அதிமுகவிற்கு மாநிலங்களவையில் 9 எம்பிக்கள் உள்ளனர். அதுபோல, டி.ஆர்.எஸ் கட்சியில் 7 பேர் மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரசின் 6 பேர் உள்ளனர். இத்துடன் சிவசேனாவும் ஆதரவு தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக, மசோதா நிறைவேற 130 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பரபரப்புக்கு இடையில், வேளாண் மசோதாவுக்கு ஆதரவு தெரிவிக்கக்கூடாது என காங்கிரஸ் தரப்பில் இருந்து அதிமுகவிடம் பேசியிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், மாநிலங்களவை பாஜக எம்பிக்கள் அனைவரும் நாளை அவைக்கு வர பாஜக கொறடா உத்தரவிட்டுள்ளார்.