சென்னை,
டில்லி போலீசாரின் சம்மன் காரணமாக நேரில் ஆஜராக டிடிவி தினகரன் டில்லி சென்றார்.
இன்று பகல் 11 மணி அளவில் அவர் டில்லி போலீசார் முன் ஆஜராவார் என தெரிகிறது.
இரட்டை இலை சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படும் வழக்கில் ஆஜராக, டிடிவி தினகரன் இன்று காலை விமானம் மூலம் டில்லி புறப்பட்டுச் சென்றார்.
டில்லி ஓட்டல் ஒன்றில் கைது செய்யப்பட்ட இடைத்தரகர் சுகேஷ் சந்தர் என்பவரிடம் இருந்து ஒரு கோடியே 30 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்த போலீசார், அவரிடம் செய்த விசாரணையை தொடர்ந்து, இரட்டை இலை சின்னத்தை தங்கள் அணிக்கு ஒதுக்க வலியுறுத்தி, தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு 50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன் மீது டில்லி போலீசார் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு காரணமாக நேரில் வந்து விசாரணைக்கு ஆஜராகுமாறு டில்லி குற்றப் பிரிவு உதவி ஆணையர் சஞ்சய் ஷராவத் மற்றும் ஆய்வாளர் நரேந்திரஷா ஆகியோர் சென்னை வந்து டிடிவியிடம் சம்மன் அளித்தனர்.
அதைத்தொடர்ந்து 3 நாட்கள் அவகாசம் கேட்டிருந்தார் தினகரன். அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், டில்லிபோலீசாரின் விசாரணைக்கு ஆஜராகா இன்று டில்லி சென்றார்.
டில்லி குற்றப்பிரிவு அலுவலகத்தில் இன்று காலை சுமார் 11 மணியளவில் டி.டி.வி.தினகரன் விசாரணைக்கு ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.