டில்லி,

ரட்டை இலை சின்னம் பெற தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற புகாரில் கைதான டி.டி.வி.தினகரன் டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் டிடிவி தினகரன் மற்றும் புரோக்கர் சுகேஷ் சந்திரா ஆகியோரின் குரல் பரிசோதனை நடத்த டில்லி குற்றப்பிரிவு போலீசார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இரட்டை இலை சின்னத்தை தங்களது அணிக்கு ஒதுக்க, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க இடைத்தரகர் சுகேஷ் சந்த்திரசேகரிடம் போனில் பேசியதாகவும், அதைத்தொடர்ந்து கொச்சியை சேர்ந்த ஹவாலா புரோக்கர்  மூலம்  பணம் அனுப்பியதாகவும் கூறப்பட்டது.

சகேஷ் சந்திரா கொடுத்த வாக்குமூலத்தை தொடர்ந்து டிடிவி தினகரன் விசாரணைக்காக டில்லி அழைக்கப்பட்டார். 4 நாட்கள் விசாரணைக்கு பிறகு டில்லி போலீசாரால்  டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டார்.

நேற்று டில்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட டிடிவி தினகரனை ஜாமினில் விட மறுத்த நீதிபதி  டில்லி போலீசாரின் கோரிக்கையை ஏற்று 5 நாட்கள் போலீஸ் காவலுக்கு உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்ட தினகரன், விசாரணைக்காக சென்னை அழைத்து வரப்பட்டு 3 நாட்கள் விசாரணை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அவர் மீண்டும் டில்லி கொண்டு செல்லப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், டி.டி.வி. தினகரன், சுகேஷ் சந்திரா ஆகியோரின் குரல் மாதிரி சோதனை நடத்த அனுமதி கோரி நீதிமன்றத்தில் டெல்லி போலீஸ் மனு செய்துள்ளனர்.