சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் அமமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றுள்ள நிலையில், தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்தை, அமமுக தலைவர் டிடிவி தினகரன் சந்தித்து, பூங்கொத்து வழங்கினார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில், அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக, அ.ம.மு.க வுடன் கூட்டணி அமைத்தது. இதையடுத்து, தேமுதிகவுக்கு 60 சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, டிடிவி தினகரன் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
இந்த நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க அலுவலகத்துக்கு அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வருகை தந்தார். அவரை, விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ் ஆகியோர் வரவேற்றனர். கூட்டணி கட்சி தலைவர்களும் தினகரனுடன் வருகை தந்தனர். பின்னர் விஜயகாந்தை சந்தித்த தினகரன், அவருக்கு மலர்கூடை கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் டிடிவி தினகரன், சுதீஷ், கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய டிடிவி தினகரன், ‘தமிழகத்தில் ஊழலற்ற வெளிப்படையான ஆட்சியை அமைக்க உருவானதுதான் இந்த கூட்டணி. சசிகலாவின் மானசீக ஆதரவு எங்களுக்குதான் இருக்கிறது. தேமுதிகவை கூட்டணிக்கு வருமாறு அமமுக அழைத்ததில் என்ன தவறு உள்ளது என்று கேள்வி எழுப்பினார்.
தீய சக்தியான தி.மு.க அதன் கூட்டணியையும், துரோக சக்தியான அ.தி.மு.க அதன் கூட்டணியையும் தேர்தலில் வீழ்த்த தே.மு.தி.கவை கூட்டணிக்கு அழைத்தோம். மக்களை ஏமாற்றக்கூடிய வெற்று வாக்குறுதிகளைதான் திமுக, அதிமுகவும் அறிவித்திருப்பது மக்களுக்கே தெரியும். வெற்றி நடைபோடுகிறது என்று நீங்கள் கூறலாம் மக்கள் காதில் என்ன பூவா உள்ளது. தேமுதிக – அமமுக கூட்டணி தலைமையினால் உருவாக்கப்பட்டது என்று சொல்வதை விட தொண்டர்களால் உருவானது என்றுதான் சொல்ல வேண்டும். அமமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதுதான் இலக்கு. வெற்றியை நோக்கி பயணிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
[youtube-feed feed=1]