திருச்சி மாவட்டம், மணக்கால், அருள்மிகு சுப்ரமண்ய சுவாமி ஆலயம்.
இந்த உலகையே ஆள்பவர் சிவன். அவரது நெற்றிப்பொறியிலிருந்து தோன்றியவர் முருகன். ஒருமுறை பிரம்மனுக்கு ஓம் என்னும் பிரணவ மந்திரத்திற்கு பொருள் தெரியாததால் அவரை சிறையில் அடைத்தார் முருகன். அப்போது சிவபெருமான் முருகனிடம் பிரணவ மந்திரத்தின் பொருளை தனக்கும் உபதேசிக்கும்படி கூறினார். முருகனும் தனது அப்பனான சிவனின் காதில் உபதேசம் செய்தார்.
தான் அறிந்து கொண்ட உபதேசத்தை சிவன் இவ்வுலகம் முழுவதும் அறிவித்தார். அதன்படி திருமாலும் பிரணவ மந்திரத்தின் பொருளை தெரிந்து கொண்டார். தனக்கு சிவன் மூலமாக மந்திர உபதேசம் செய்த முருகனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பெருமாள் தனது திருவிழாவின் போது, இங்குள்ள முருகன் கோயிலுக்கு எழுந்தருளுகிறார் என தலவரலாறு கூறுகிறது.
திருவிழா:
சித்திரை முதல் நாள், வைகாசி விசாகம், ஆடி கிருத்திகை, கந்த சஷ்டி, பங்குனி உத்திரம்.
தல சிறப்பு:
இந்த ஊரின் மத்தியில் உள்ள வரதராஜப்பெருமாள் திருக்கோயிலில் ஆவணி மாதம் நடைபெறும் திருவிழாவின்போது தான் பெருமாள், தன் மருமகனான முருகனைப் பார்க்க ஸ்ரீதேவி பூதேவி சகிதம் இங்கே வந்து சற்றுநேரம் தங்கி சேவை சாதிப்பார்.
தான் விழாக்காணும் சமயத்தில் தன் மருமகனைத் தேடி வரும் மாலவனை தரிசித்து அருள் பெற பக்தர்கள் பலர் கூடுவர் என்பது சிறப்பு.
பொது தகவல்:
கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ள ஆலயத்தின் உள்ளே நுழைந்ததும் மகாமண்டபம்.
கருவறையில் சுப்ரமண்ய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். மகாமண்டபத்தின் வலது புறம் உற்சவர் திருமேனி உள்ளது.
பிரார்த்தனை:
உடற்பிணி, மனநோய்களை போக்க இங்குள்ள முருகனை வழிபாடு செய்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
பக்தர்கள் விதவிதமான காவடிகள் எடுத்தும், அபிஷேக ஆராதனைகள் செய்தும் பிரார்த்தனைகளை நிறைவு செய்கின்றனர்.
தலபெருமை:
இந்த முருகனின் ஆலய வளாகத்தில் யஜுர் வேத பாடசாலை அமைத்திருப்பதால், எப்போதும் வேதமந்திர ஒலி இங்கே நிறைந்திருக்கிறது.
அந்த மந்திரங்களின் அதிர்வு நாள் தோறும் இங்கு வரும் பக்தர்களின் உடற்பிணி, மனநோய்களைப் போக்குவது கண்கூடு.
தன்னை ஆராதிக்கும் அனைவருக்கும் மணக்கால் முருகன் தன் அருளை வாரி வழங்குவதில் வள்ளலாகவே திகழ்கிறான் என்று பக்தர்கள் சொல்வது நிதர்சனமான உண்மை!