டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்து காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ. உத்தரவிட்டுள்ளார், 2033 அக்டோபர் வரை அவரது ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் மேல்முறையீடு செய்ய அவருக்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
உயர்ரக இரண்டு சக்கர வாகனங்களை சாலையில் அதிவேகமாக இயக்குவதும் சாகசத்தில் ஈடுபடுவதையும் வாடிக்கையாகக் கொண்டு இணையதளத்தில் பிரபலமானவர் டிடிஎப் வாசன்.
விதிகளுக்கு புறம்பாக வாகனங்களை ஒட்டியதாக ஏற்கனவே பல்வேறு சம்பவங்களில் இவர் மீது கோவை, நீலகிரி, கடலூர், சென்னை மற்றும் மணாலி (ஹிமாச்சல் பிரதேசம்) ஆகிய இடங்களில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கடந்த மாதம் காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டி சத்திரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக இருசக்கர வாகனத்தை ஒட்டிச் சென்ற வாசன் சர்வீஸ் சாலையில் வீலிங் சாகசம் செய்த போது விபத்தில் சிக்கினார்.
இதில் தனது கையெலும்பு முறிந்ததாக மருத்துவமனைக்கு சென்று கட்டுபோட்டுக்கொண்டு வீடு திரும்பினார் வாசன்.
பொதுமக்கள் பயணம் செய்யும் சாலையில் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக சென்று வீலிங் சாகசத்தில் ஈடுபட்டது அங்கிருந்த சிசிடிவி-யில் பதிவாகியிருந்தது. இது தொடர்பான பதைபதைக்க வைக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் டிடிஎப் வாசன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அவரது ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படுவதாக காஞ்சிபுரம் மண்டல ஆர்.டி.ஓ. இன்று அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு, விதிகளுக்கு புறம்பாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பயணம் மேற்கொள்வதுடன் தாங்கள் செய்வதை சாகசம் என்று கூறி யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இளைஞர்களை தவறாக வழி நடத்துபவர்களுக்கு எச்சரிக்கையாக அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.