திருப்பதி

சுற்றுச்சூழல் மாசு அடைவதைத் தடுக்க திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுக்கு 35 மின்சார கார்கள் வாங்கப்பட்டுள்ளது.

திருப்பதியில் தேவஸ்தான அதிகாரிகள் பயன்படுத்த 60 கார்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த 60 கார்களில் 40 கார்கள் உள்ளூர் பயன்பாட்டுக்காகவும் மீதமுள்ள 20 கார்கள் நீண்ட தூர பயணத்துக்கும் பயன்படுத்தப்படுகிறது.

நாளுக்கு நாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது.  மேலும் கார்களில் இருந்து வரும் புகையால் சுற்றுச் சூழல் மாசு மிகவும் அதிகரித்து வருகிறது. எனவே இந்த கார்களுக்கு மாற்றாக பேட்டரியில் இயங்கும் மின்சார கார்களை பயன்படுத்துமாறு மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.

எனவே திருப்பதி தேவஸ்தானம் டாட்டா நிறுவனத்திடமிருந்து 35 மின்சார கார்களை வாங்கி உள்ளது.   இவை ஒருமுறை ரீசார்ஜ் செய்தால் 250 கிமீ தூரம் வரை செல்லக் கூடியவை ஆகும்.   இதற்காகத் திருப்பதி மற்றும் திருமலையில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  இந்த கார்கள் 6 ஆண்டுகளுக்கு மாத தவணை திட்டத்தில் வாங்கப்பட்டுள்ளன.

இப்போது திருப்பதி தேவஸ்தானம் மாத வாடகையாக ரூ.24,000 முதல் ரூ.35,000 வரை தருகிறது.   இதற்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.1.15 கோடி மட்டுமே செலவாகிறது.   அதே வேளையில் மின்சார கார்களை பயன்படுத்தினால் ஆண்டுக்கு ரூ.2.30 கோடி செலவாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.