திருப்பதி லட்டுக்கு ஏறக்குறைய 50 ஆண்டுகளாக சுவையும் மணமும் சேர்த்து வந்த கர்நாடக பால் கூட்டுறவு சங்கத்தின் ‘நந்தினி’ நெய்யை இனி வாங்குவதில்லை என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கர்நாடக பால் கூட்டுறவு சங்க (KMF) தலைவர் பீமா நாயக் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கர்நாடக பால் கூட்டுறவு சங்கத்திடம் இருந்து இந்த ஆண்டு நெய் கொள்முதல் செய்யப்போவதில்லை என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
KMF நிறுவனத்தை விட வேறு ஒரு நிறுவனம் குறைந்த விலைக்கு நெய் விற்பனை செய்ய ஒப்பந்தம் கோரியதை அடுத்து இந்த முடிவை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
திருப்பதி லட்டின் சுவை மற்றும் மணத்திற்கு ‘நந்தினி’ நெய்யின் தரம் தான் காரணம் என்று தேவஸ்தானம் பலமுறை கூறியுள்ள நிலையில் விலை காரணமாக தற்போது இதை வாங்க மறுத்திருப்பது எங்களுக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.