சென்னை

திருப்பதி கோவில் நிர்வாகத்தில் முறைகேடுகள் உள்ளதாக திருப்பதி கோவிலின் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதுலு தெரிவித்துள்ளார்.

உலகின் பணக்காரக் கோவில்களில் ஒன்று எனக் கூறப்படுவது திருப்பதி கோவில் ஆகும்.   இங்கு பரம்பரை அர்ச்சகர்களாக சுமார் 45  பேர் உள்ளனர்.  அவர்களில் தலைமை அர்ச்சகராக விளங்குபவர் ரமண தீட்சிதுலு ஆவார்.    வெகுநாட்களாக  திருப்பதி கோவில் நிர்வாகத்துக்கும் கோவில் அர்ச்சகர்களுக்கும் இடையே பனிப்போர் நிகழ்ந்து வருகிறது.

இந்நிலையில் சென்னையில் ரமண தீட்சிதுலு பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தினார்.  அப்போது அவர், “பரம்பரை அர்ச்சகர்களான எங்களிடம் இருந்தவரை கோவில் நிர்வாகம் சிறப்பாக இருந்தது.   கடந்த 19996 வரை சாமியின் நகைகளுக்கும், சொத்துக்களும் எங்கள் கண்காணிப்பில் பத்திரமாக இருந்தது.  ஆந்திர அரசின் கீழ் அதுமாறிய பின் இந்த 22 ஆண்டுகளில் பல முறைகேடுகள் நடைபெற்றுள்ளன.

இதுவரை நகைகளின் கணக்கு மட்டுமே சாமிக்கு படித்துக் காட்டப்படுகிறது.  ஆனால் பல நாட்களாக கணக்கெடுக்கப்படவில்லை.   புதிய நகைகள் மட்டுமே சாமிக்கு அணிவிக்க அளிக்கப்படுகின்றன?  பழைய நகைகள் என்ன ஆயிற்று?  இது குறித்து உடனடியாக ஒரு கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.    இதை சிபிஐ போன்ற உயர்மட்ட விசாரணைக் குழு நடத்த வேண்டும்.

ஆலயத்துக்கு வரும் வருமானத்தில் பல கோடிக்கணக்கான ரூபாய்கள் அரசால் பல திட்டங்களுக்கு திருப்பி விடப்படுகின்றன.   இதில் குடிமாலா கிராமத்தில் உள்ள புதிய கோவில்கள் கட்டுமானப் பணியும் அடங்கும்.  இதற்காக ரூ.10 கோடி நிதி உதவி அளிக்க உள்ளது.  இதற்கான திட்டம் நேற்று விவாதிக்கப்பட்டுள்ளது.

வி ஐ பி தரிசனத்துக்காக கோவிலின் பல பூஜை நேரங்கள் மாற்றப்படுகின்றன.  கோவில் நிர்வாகத்துக்கு கோவிலின் ஆகமம் குறித்து எந்த ஒரு அக்கறையும் இல்லை.   வருமானத்தை மட்டுமே நிர்வாகம் குறி வைக்கிறது.  இதனால் பக்தர்களுக்கு நம்பிக்கை குறைந்து பல விரும்பத்தகாத செயல்கள் நிகழ்கின்றன்”  என தெரிவித்துள்ளார்.