சென்னை: தமிழகஅரசு மீது குற்றம் மட்டுமே சொல்லாமல் மத்திய அரசிடம் இருந்து தடுப்பூசிகள் பெற்றுத்தர முயற்சி செய்யுங்கள் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனுக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டமாக கோவை திகழ்கிறது. இதையடுத்து,  தமிழகஅரசால் “கோவை புறக்கணிக்கப்படுவதாக பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்  குற்றம்சாட்டி வந்தார்.

இதுகுறித்து கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்,  சென்னைக்கு அடுத்தப்படியாக அதிகளவில் கோயமுத்தூரில்தான்  தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 38 லட்சம் மக்கள் தொகை கொண்ட கோவைக்கு இதுவரை 6 லட்சத்து ஆயிரம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. தமிழக்ததில் இன்னும் 2 நாட்களுக்கு மட்டுமே தடுப்பூசி கையிருப்பு உள்ளது என கூறியிருந்தார்.

இதற்கு பதில் தெரிவித்துள்ள வானதி சீனிவாசன்,  ஜூன் மாதம் மத்திய அரசிடமிருந்து தமிழ்நாடு 42 லட்சம் தடுப்பூசிகளைப் பெறும் என்று கூறியிருப்பதுடன்,  , “ஜூன் மாதம் மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கும் தடுப்பூசிகள் 25,84,380 ( 45 வயது -மேல்) மாநில அரசு நேரடியாக (18 to 44 வயது) பெறும் 16,07,840 என கிட்டதட்ட 42 லட்சம் தடுப்பூசிகள் பெறுகிறோம். சேதமில்லாமல் , விரைவாக மக்களிடம் சேர்க்க தமிழ்நாடு முதல்வரும், சுகாதார அமைச்சரும் திட்டமிடட்டும்” என தெரிவித்திருக்கிறார்.

இதற்கு மீண்டும் பதில் தெரிவித்துள்ள அமைச்சர் மா.சு, வானதி சீனிவாசனுக்கு உண்மையிலேயே கோவை மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற அக்கறை இருந்தால், மத்திய தொகுப்பிலிருந்து பாரபட்சம் இல்லாமல் தமிழ்நாட்டுக்கு அதிகளவில் தடுப்பூசிகளை பெற்றுத்தர வேண்டும்.

அதுபோல செங்கல்பட்டில் தடுப்பூசி உற்பத்தி செய்யும் மையம் 10 ஆண்டுகளாக மூடியே கிடக்கிறது, அந்த ஆலையை தமிழ்நாடு முதல்வர் நேரடியாக ஆய்வு செய்து, அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார். அதன்பின்னர் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற திமுக தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் உடனடியாக டெல்லி சென்று சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர்கள் மற்றும் அலுவலர்களை சந்தித்தனர். எனவே செங்கல்பட்டு தடுப்பூசி ஆலையில் மத்திய அரசே உடனடியாக உற்பத்தியை தொடங்குவதற்கு அல்லது தமிழக அரசு அந்த ஆலையில் தடுப்பூசி உற்பத்தி செய்ய வானதி சீனிவாசன் மத்திய அரசிடம்  இருந்து நல்ல பதிலை பெற்றுத்தர வேண்டும் ” என தெரிவித்தார்