கொஹிமா:

நாகலாந்து சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தற்போதைய முதல்வர் ஷூரோசெலி லீசீட்சு ஆட்சியை தக்க வைப்பரா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

உள்கட்சி மோதல் காரணமாக நாகலாந்து ஆட்சி செய்துவரும் நாகா மக்கள் முன்னணியில் பிளவு ஏற்பட்டுள்ளது. தற்போதைய முதல்வர் தலைமையில் ஒரு பிரிவாகவும், முன்னாள் முதல்வர் தலைமையில்  ஒரு பிரிவாகவும் செயல்பட்டு வருகின்றனர்.

இதையடுத்து ஏற்பட்ட மோதல் காரணமாக நாகலாந்து சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு ஆளுநர் உத்தரவிட்டார்.

அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், கோர்ட்டு தடை விதிக்க மறுத்ததை தொடர்ந்து இன்று சட்டப்பேரவையில் அம்மாநில முதல்வர் ஷூரோசெலி லீசீட்சு நம்பிக்கை வாக்கு கோருகிறார்.

மொத்தம் 60 சட்டமன்ற தொகுதிகள் உள்ள நாகலாந்தில், தற்போதுழ 59 எம்எல்ஏ-க்கள் உள்ளனர். இதில் 43 பேர் தற்போதைய முதல்வர்  லீசீட்சுவுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

இவர்களுக்கு தலைவராக  முன்னாள் முதல்வர் டி.ஆர்.ஜேலியாங் செயல்பட்டு வருகிறார். இதன் காரணமாக தற்போதைய முதல்வர் லீசீட்சு பதவி விலக வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜேலியாங்

மேலும், அண்மையில் ஆளுநர் பி.பி.ஆச்சார்யாவைச் சந்தித்த ஜேலியாங், தமக்கு பெரும்பான்மை எம்எல்ஏ-க்களின் ஆதரவு இருப்பதால் தம்மை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு உரிமை கோரினார்.

இதையடுத்து, சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்கு மாறு ஆளுநர், முதல்வர் லீசீட்சுக்கு கடந்த 11 மற்றும் 13-ம் தேதிகளில் உத்தரவிட்டார்.

ஆனால், கவர்னரின்  உத்தரவை நாகாலாந்து அமைச்சரவை நிராகரித்தது. மேலும், ஆளுநரின் உத்தரவுக்குத் தடை விதிக்க கோரி முதல்வர் லீசீட்சு, குவாஹாட்டி உயர் நீதிமன்றத்தில்மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை  விசாரித்த நீதிபதிகள், முதல்வரின் மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துவதற்காக நாகாலாந்து சட்டப் பேரவையை இன்று (புதன்கிழமை) காலை 9.30 மணிக்குக் கூட்டுமாறு பேரவைத் தலைவர் இம்திவாபாங் ஏயருக்கு ஆளுநர் ஆச்சார்யா உத்தரவிட்டார்.

இந்நிலையில், இன்று நாகலாந்து சட்டப்பேரவை இன்று கூடுகிறது.

இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மை ஆதரவு பெற்றால் மட்டுமே முதல்வர் லீசீட்சு பதவியில் தொடர முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், முதல்வர் பதவியில் இருந்து லீசீட்சு ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.