அமெரிக்காவை உலகின் முதன்மை நாடாக மீண்டும் கட்டமைக்க வர்த்தகப் போரை அதிபர் டிரம்ப் துவங்கியுள்ளார்.
இதனால் ஏற்படும் வலிகளை தாங்கிக்கொள்ள அமெரிக்கர்கள் தயாராக இருக்கவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கனடா, சீனா மற்றும் மெக்ஸிகோ ஆகிய மூன்று நாடுகளுக்கு எதிராக வரிவிதிப்புகளை அறிவித்துள்ள டிரம்ப் இதனால் அமெரிக்காவில் விலைவாசி உயர வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளார்.
இந்த விலைவாசி உயர்வால் ஒவ்வொரு குடும்பமும் சுமார் $830 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 72000) மேலதிகமாக செலவிட நேரிடும் என்று கூறப்படுகிறது.
தனது வர்த்தக கூட்டாளிகளுடன் அமெரிக்கா அதிபர் கட்டவிழ்த்துவிட்டுள்ள இந்த வர்த்தக போரால் உலக பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்துள்ளது.
ஆசிய பங்குச் சந்தைகள் சரிந்தததை தொடர்ந்து இந்திய பங்குச் சந்தையும் இன்று துவக்கம் முதலே சரிவை சந்தித்து வருகிறது.
பிப்ரவரி 4 ஆம் தேதி முதல் கனடா மற்றும் மெக்ஸிகோவில் இருந்து அனுப்பப்படும் பெரும்பாலான பொருட்களுக்கு 25 சதவீத வரியையும் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ள வரிகளுக்கு கூடுதலாக 10 சதவீத வரியை விதிப்பதாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.