அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையில் உருவாக உள்ள அமைதி வாரியத்தில் (Board of Peace) 30க்கும் மேற்பட்ட நாடுகள் இணைந்துள்ளன.

காசா பிராந்தியத்தில் அமைதியை நிலை நாட்ட அமெரிக்கா பகீரத பிரயத்தனம் செய்து வரும் நிலையில் தனது இந்த முயற்சிக்கு துணையாக பல்வேறு நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Board of Peace (அமைதி வாரியம்) என்ற பெயரில் உருவாக்கப்படும் இந்த அமைப்பு காசாவைத் தொடர்ந்து சர்வதேச அளவில் அமைதிக்காகப் போராடும் என்று டிரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் மார்கோ ரூபியோ, மத்திய கிழக்குக்கான அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப், டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர், முன்னாள் இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர், கோடீஸ்வர தொழிலதிபர் மார்க் ரோவன், உலக வங்கி குழுமத் தலைவர் அஜய் பங்கா மற்றும் அமெரிக்க துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் கேப்ரியல் ஆகியோர் இந்த அமைப்பின் நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வாரியத்தின் தலைவராக சாட்சாத் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவி வகிப்பார் என்றும் அவரது பதிவிக்காலம் காலவரையற்றது என்றும் கூறப்படுகிறது.

இந்த அமைப்பில் உறுப்பினராக சேரும் நாடுகள் $1 பில்லியன் (சுமார் 9000 கோடி ரூபாய்) கட்டணமாக செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன் சுவிற்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்ட டிரம்ப், தனது அழைப்பை ஏற்று அமைதி வாரியத்தில் சேர விருப்பம் தெரிவித்த தலைவர்களுடன் கூட்டாக பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், இந்த அமைப்பு ஐ.நா.வுக்கு மாற்றாக இருக்கும் என்ற ரீதியில் பேசியிருந்தார்.

அர்ஜென்டினா, ஆர்மீனியா, அஜர்பைஜான், பஹ்ரைன், பெலாரஸ், ​​எகிப்து, ஹங்கேரி, இந்தோனேசியா, ஜோர்டான், கஜகஸ்தான், கொசோவோ, மொராக்கோ, பாகிஸ்தான், கத்தார், சவூதி அரேபியா, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகங்கள், உஸ்பெகிஸ்தான், வியட்நாம், பல்கேரியா, மங்கோலியா, பராகுவே உள்ளிட்ட சுமார் 30-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த அமைப்பில் சேர்ந்துள்ளன.

பிரான்ஸ், நார்வே, ஸ்லோவேனியா, ஸ்வீடன், பிரிட்டன், பிரேசில் உள்ளிட்ட நாடுகள் இந்த அமைப்பில் சேர மறுத்துவிட்டன.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிரேசில் அதிபர் லூலா, “டிரம்ப், தான் மட்டுமே உரிமையாளராக இருக்கும் ஒரு புதிய ஐ.நா.வை உருவாக்க முயற்சிக்கிறார்’ என்று விமர்சித்துள்ளார்.

சீனா, இந்தியா, ரஷ்யா, ஜெர்மனி, இத்தாலி, உக்ரைன், கம்போடியா, தாய்லாந்து, சிங்கப்பூர் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிர்வாகப் பிரிவு உட்பட பல நாடுகள் இந்த அமைப்பில் சேருவது குறித்தோ அல்லது எதிர்த்தோ இதுவரை எந்தக்கருத்தும் கூறவில்லை.

இந்தியா இந்த விவகாரத்தில் மௌனம் காத்து வரும் நிலையில் அமைதி வாரியத்தில் பாகிஸ்தான் இணைந்துள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போரை நான் தான் நிறுத்தினேன் என்று டிரம்ப் பலமுறை தொடர்ந்து கூறிய போது, அதை ஆமோதித்த பாகிஸ்தான் ஒரு படி மேலே சென்று அவருக்கு நோபல் பரிசு வழங்கவேண்டும் என்றும் பரிந்துரைத்தது.

இந்த விவகாரத்திற்குப் பின் டிரம்ப் – மோடி இடையேயான நட்புறவு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை என்ற நிலையில் தற்போது அமைதி வாரியம் என்ற பெயரில் ஐ.நா.வுக்கு இணையாக டிரம்ப் உருவாக்கியுள்ள அமைப்பில் பாகிஸ்தான் இணைந்திருப்பது இந்தியாவுக்கு மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளையில், ஐ.நா.வின் துணை அமைப்புகள், உலக சுகாதார அமைப்பு தவிர 66 சர்வதேச அமைப்புகளில் இருந்து அமெரிக்கா விலகியதாக அறிவித்துள்ள நிலையில் “அமைதி வாரியம்” என்ற பெயரில் சில நாடுகளை சேர்த்துக் கொண்டு தனி சாம்ராஜ்ஜியம் நடத்த டிரம்ப் தீர்மானித்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

மேலும், அமெரிக்க வரலாற்றில் வாஷிங்டனுக்குப் பிறகு மூன்றாவது முறையாக யாரும் அதிபராக பொறுப்பேற்றதில்லை என்ற நிலையில் இரண்டாவது முறையாக அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் மூன்றாவதுக்குப் பதிலாக நான்காவது முறையாக நீடிப்பது குறித்து சமூக வலைதளத்தில் கூறியுள்ளது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

[youtube-feed feed=1]