ஈரான்மீது மீண்டும் பொருளாதார தடை? டிரம்ப் மிரட்டல்

Must read

அமெரிக்க அதிபர் டிரம்ப்

வாஷிங்டன்:

ரான் நாட்டுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொள்வதாக தெரிவித்துள்ள  அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரான் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்றும்  அறிவித்துள்ளார்.

கடந்த ஒபாமா ஆட்சியின்போது ஈரானுடன் அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொண்டது. அந்த ஒப்பந்தம் உளுத்துப்போன ஒப்பந்தம் என்று வர்ணித்த டிரம்ப், நாட்டின் குடிமகன் என்ற முறையில் அது தமக்கு மிகுந்த தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருப்பதாக கூறி உள்ளார்.

மேலும், ஐரோப்பிய கூட்டணி நாடுகளின் ஆலோசனைக்கு மாறாக, 2015-ல் அணுசக்தி ஒப்பந்தம் ஏற்பட்டபோது தளர்த்தப்பட்ட ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை மீண்டும் விதிக்கப் போவதாக டிரம்ப் மிரட்டி உள்ளார்.

மேலும், ஈரான்  மீதான பொருளாதாரத் தடைகளை உடனடியாக அமல்படுத்தப் போவதில்லை என்றும், 3 மாதம் முதல் 6 மாதம் வரை  நடைமுறைகளின்படி செயல்பட இருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஈரான்  அதிபர் ஹசன் ரூஹானி

ஆனால் இதற்கு பதில் அளித்து ஈரான்  அதிபர் ஹசன் ரூஹானி, ”தனது ஒப்பந்த்தை மதிக்கப் போவதில்லை என அமெரிக்கா கூறியுள்ளது. அதனால், ஈரான் அணு எரிசக்தி அமைப்பை யுரேனியம் செறிவூட்டும் பணியை மீண்டும் தொடங்க தயாராக இருக்குமாறு அறிவுறுத்தியிருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தத்தில் ஏற்கனவே கையெழுத்திட்டிருந்த பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள்  அமெரிக்காவின் முடிவு வருத்தமளிப்பதாகத் தெரிவித்துள்ளன.

ஆனால், டிரம்பின் தைரியமான இந்த முடிவை ஆதரிப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா செய்து கொண்ட ஒப்பந்தம், ஈரான் தனது அணு ஆயுத நடவடிக்கைகளை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே நிறுத்தி வைக்க உதவியதாகவும் ஆனால் பாலிஸ்டிக் ஏவுகணைகள் தயாரிக்கும் அதன் செயல்பாடுகளைத் தடுக்கவில்ல என்றும் டிரம்ப் கூறி வந்துள்ளார்.

ஆனால், டிரம்பின் இந்த முடிவு ஆபத்தானது என்றும்,  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உலகம் எந்த மாதிரி ஆபத்தான நிலையில் இருந்ததோ அதை நிலைக்கு உலகத்தை மீண்டும் தள்ளும் ஆபத்து உருவாகி வருவதாக ஒபாமா ஆட்சியின்போது இருந்த  முன்னாள் அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஜான் கெர்ரி அதிர்ச்சி தெரிவித்து உள்ளார்.

More articles

Latest article