ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு செவிலியர் ஒருவர் வீடியோ செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “கொரோனா வைரஸ் தொற்றுநோய் இன்னும் மக்களால் முறையாக கவனமாக தீர்க்கப்பட வேண்டிய ஒன்று. கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் செவிலியர் கிறிஸ்டினா ஹாப்ஸ், திங்களன்று ஜனாதிபதியின் ட்வீட்டைப் படித்தபின் தான் வருத்தப்பட்டதாகக் கூறினார், அதில் அவர் அமெரிக்கர்களிடம் “கோவிட்டுக்கு பயப்பட வேண்டாம், அது உங்கள் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்த வேண்டாம்” என்று கூறி இருந்தார். “ஜனாதிபதியின் டிவீட்டை வீட்டிற்கு வந்து படித்ததும் மிகுந்த கோபமடைந்தேன். நான் ஏதாவது சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்” என்று வாஷிங்டனின் சியாட்டிலில் வசிக்கும் ஹாப்ஸ் தனது உணர்வுகளை உலகத்துடன் பகிர்ந்து கொள்ள ஒரு டிக்டாக் வீடியோவை உருவாக்கினார். “நூற்றுக்கணக்கான மக்கள் மூச்சுத் திணறல் கொண்டு மரணமடைந்திருப்பதை நான் கண்டிருக்கிறேன், கோவிட்டைப் பற்றி பயப்பட வேண்டாம் என்று அவர் சொல்வது வியக்க வைக்கிறது” என்று அவர் வீடியோவில் கூறுகிறார். “செவிலியர்களாக நாங்கள் மற்றும் மருத்துவர்கள் செய்த அனைத்து வேலைகளையும் அவர் எவ்வளவு குறைவாக மதிப்பிடுகிறார்?” என்று கோபம் கொள்கிறார். இந்த வீடியோ வெளியான சிறிது நேரத்திலேயே பரப்பரப்பாக பகிரப்பட்டு வைரல் ஆனது. வியாழக்கிழமை மாலை நிலவரப்படி, வீடியோ டிக்டாக்கில் 300,000 க்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டிருந்தது. மேலும், இது சமூக ஊடக தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. செவிலியர் மனம் திறந்து மனதில் உள்ளதைப் பேசியதற்காக மக்கள் பாராட்டும் குவிகிறது.
ஒரு சுகாதாரப் பணியாளராக தனது அனுபவத்தில், கொரோனா வைரஸ் தொற்று ஒரு சமூகத்தை எவ்வாறு கடுமையாக பாதிக்கும் என்பதை நேரில் கண்டதாக ஹாப்ஸ் கூறினார். அவர் கடந்த கோடையில் புளோரிடாவின் மியாமியில் உள்ள ஒரு மருத்துவ மனைக்கு ஐந்து வாரங்களுக்கு உதவி செய்ய அனுப்பப்பட்டார். “நான் பணிபுரிந்த மருத்துவமனை முற்றிலுமாக நோயாளிகளால் நிரம்பி வழிந்தது,” என்று அவர் சிஎன்என் -பேட்டியில் கூறினார். “மருத்துவமனை நோயாளிகளால் நிரம்பியிருக்கும் போது ஒவ்வொருவருக்கும் தேவையான மற்றும் தகுதியான மருத்துவ பராமரிப்பை வழங்க முடியாது.” மக்கள் அச்சத்துடன் வாழ வேண்டும் என்று ஹாப்ஸ் நம்பவில்லை என்றாலும், எத்தனை பேர் தனிப்பட்ட முறையில் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதைப் பொறுத்தவரை ஜனாதிபதியின் வார்த்தைகள் பொறுப்பற்றவை மற்றும் அவமரியாதைக்குரியவை என்று உணர்ந்ததாக கூறினார். ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகளின்படி, ஜனாதிபதி உட்பட – 7.6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அமெரிக்காவில் மட்டும் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 212,000 க்கும் மேற்பட்ட மக்கள் வைரஸால் இறந்துள்ளனர்.
“ஜனாதிபதியின் இந்தச் செய்தியைப் பார்க்கும் மக்கள் அனைத்தும் சரியாகி விட்டதாக நம்புவார்கள். ஆனால், உண்மை நிலவரம் அதுவல்ல” என்று அவர் கூறினார். மேலும், “தனது வீடியோவைப் பார்ப்பவர்கள் வைரஸ் வரும்போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன்” என்று ஹாப்ஸ் கூறினார். ஜனாதிபதி தனது வீடியோவைப் பார்த்தால், வைரஸுடனான அவரது அனுபவமும், சாதாரண அமெரிக்க பிரஜையின் அனுபவமும் ஒன்றானதல்ல என்பதை உணர வேண்டும் என்றார். “மிக முக்கியமானது என்னவென்றால், மக்களாகிய நாங்கள் ஒருவரை ஒருவர் கவனித்துக் கொள்கிறோம், நாங்கள் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டிருக்கிறோம், ஆனால், ஜனாதிபதியின் செய்தி அதை பிரதிபலிக்கவில்லை என்பதே உண்மை,” என்றும் மேலும் கூறினார்.