வாஷிங்டன் :

ச்சா எண்ணெய் வரலாறுகாணாத வீழ்ச்சியை சந்தித்து வருவதையடுத்து வளைகுடா நாடுகளில் பதட்டம் அதிகரித்துவரும் சூழ்நிலையில், அமெரிக்க கடற்படைக் கப்பல்களுக்கு இடையூறு செய்யும் ஈரான் ராணுவ படகுகளை சுட்டு வீழ்த்துமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார்

“எங்கள் கப்பல்களை கடலில் தொந்தரவு செய்யும் அனைத்து துப்பாக்கி ஏந்திய ஈரானிய படகையும் சுட்டு அழிக்குமாறு நான் அமெரிக்க கடற்படைக்கு அறிவுறுத்தியுள்ளேன்” என்று டிரம்ப் புதன்கிழமை காலை ட்வீட் செய்துள்ளார்.

கடந்த வாரம் ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படையைச் சேர்ந்த 11 கடற்படை படகுகள் பெர்சிய வளைகுடாவில் உள்ள அமெரிக்க கடற்படை மற்றும் கடலோர காவல்படை கப்பல்களுக்கு மிக அருகில் வந்துள்ளன, அமெரிக்க இராணுவம் இது மிகவும் “ஆபத்தானது” என்று கூறியிருந்தது.

இந்த சம்பவம் குறித்து கடந்த சனிக்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “நான் பதவிக்கு வந்தபோது ஈரான் ஒரு பயங்கரவாத நாடாக இருந்தது. இப்போது, ​​அவர்கள் எங்களுடன் மோதல் போக்கை விரும்பவில்லை ” . “மேலும், ஈரான், ரஷ்யா, சீனா மற்றும் வடகொரியா உள்ளிட்ட எந்த ஒரு நாடும் அமெரிக்க ராணுவத்துடன் மோதலில் ஈடுபட விரும்பவில்லை” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று, ஈரான் தனது ராணுவ செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதாக அறிவித்த சிறிது நேரத்தில், அமெரிக்க அதிபரின் இந்த ட்வீட் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த இரு வாரங்களுக்கு முன், தைவான் கடற்பகுதியில் போர் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சீன போர்க்கப்பலை உரசும் வகையில் அமெரிக்க போர்க்கப்பல் சென்றதும் அதற்கு சீனா கண்டனம் தெரிவித்ததும். அதுபோல், கடந்த வாரம் மத்திய தரைக்கடல் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க போர் விமானத்தை உரசியபடி ரஷ்ய போர் விமானம் சென்றதும் அதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்ததும் நினைவுகூறத்தக்கது.

ஈரான் புரட்சிகர காவல்படையின் தளபதி காசிம் சோலேமானியை கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க ராணுவத்தினர் சுட்டுக்கொன்றது உலகெங்கும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில். உலக நாடுகள் அனைத்திலும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவியதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவு, கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி ஆகியவற்றை சமாளிக்க போராடிவரும் வேலையில், வெள்ளை மாளிகையில் இருந்து வந்திருக்கும் இந்த உத்தரவு உலக நாடுகளை கலக்கமடையச் செய்துள்ளது.