அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஆண்டுக்கு ஒருமுறை ஜனவரி-யில்  நடக்கும் சிறப்பு கூட்டத்தில் அந்த நாட்டின் அதிபர் நாட்டின் நிலை மற்றும் வளர்ச்சி குறித்து ( State of the Union ) சிறப்புரையாற்றுவது  மரபு.

இந்த ஆண்டு, டிரம்ப் மீதான பதவிநீக்க விசாரணைக்கு பின், நேற்று நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார் டொனால்ட் டிரம்ப்.

பதவிநீக்க விசாரணைக்கு பின் தன் மீது புகாரளித்த ஜனநாயக கட்சியினரை முதல் முறையாக டிரம்ப் சந்திக்க இருந்ததும், அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன் நடக்கும் கூட்டம் என்பதாலும் இந்த கூட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

அதிபர் டிரம்ப் தனது உரையை துவங்கும் முன் தன் மீது புகாரளித்ததில் பெரும்பங்காற்றிய அவைத்தலைவர் நான்சி பிலோசி கைகுலுக்க முன்வந்தபோது கைகுலுக்குவதை தவிர்த்தார் டிரம்ப்.

பின், தனது உரையை முழுவதுமாக முடித்தார், அப்பொழுது, அவைத்தலைவர் நான்சி பிலோசி, தன்னிடமிருந்த அதிபரின் உரை அடங்கிய தாள்களை கிழித்தார், இதை பார்த்தவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய, பிலோசி “இது தான் என்னால் கொடுக்கமுடிந்த குறைந்தபட்ச மரியாதை” என்று கூறினார்.

அதிபர் டிரம்ப் மற்றும் அவைத்தலைவர் நான்சி பிலோசி இடையிலான இந்த மோதல் சம்பவம் அமெரிக்காவில் தற்போது  பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.