டில்லி
சீன எல்லை விவகாரத்தால் மோடி மகிழ்ச்சியான மனநிலையில் இல்லை என டிரம்ப் கூறியதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்தியா மற்றும் சீன நாடுகளுக்கிடையே எல்லை குறித்துப் பல ஒப்பந்தங்கள் இடப்பட்டுள்ளன. ஆயினும் சீனா எல்லையில் படைகளைக் குவிப்பதும், அதற்குப் பதிலடியாக இந்தியா தனது படைகளைக் குவிப்பதும் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. ஒவ்வொரு நிகழ்வின் போதும் பேச்சு வார்த்தை நடந்து அதன்பிறகு சமுகம் உண்டாவதும் வழக்கமாக உள்ளது. இப்போது மீண்டும் பிரச்சினை ஆரம்பித்துள்ளது.
எல்லையில் லடாக் பகுதியில் சீனா தனது ராணுவத்தைக் குவித்துள்ளது. இதற்குப் பதிலடியாக இந்தியாவும் தனது ராணுவத்தினரை குவித்து வருகிறது. சீன அதிபர் தனது படைகள் கவனத்துடனும் போர் புரியத் தயாராக இருக்க வேண்டும் எனக் கூறினார். இந்தியப் பிரதமர் நாட்டின் பாதுகாப்பு அதிகாரிகள், அமைச்சர் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையொட்டி அமெரிக்க அதிபர் டிரம்ப் தாம் இருநாடுகளுக்கு இடையே எல்லை குறித்து மத்தியஸ்தம் செய்ய தயாராக உள்ளதாக அறிவித்தார். இந்திய அரசு அதை மறுத்தது. இந்திய சீன நாடுகளுக்கு இடையே அதிகார மற்றும் ராணுவ மட்டத்தில் பேச்சு வார்த்தை நடப்பதாகவும் அதன் மூலம் தீர்வு காண உள்ளதாகவும் இந்திய அரசு தெரிவித்தது
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்தியாளர்களிடம், “இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே பெரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது. எனக்கு இந்தியப் பிரதமரைப் பிடிக்கும் அவர் ஒரு பெரிய ஜெண்டில்மேன், பிரதமர் மோடியுடன் நான் பேசினேன் இருநாடுகளுக்கும் இடையில் உள்ள பிரச்சினையால் மோடிமகிழ்ச்சியான மனநிலையில் இல்லை.” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் இந்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,”இந்திய பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகிய இருவரும் சமீபத்தில் பேசிக்கொள்ளவில்லை. அவர்கள் இருவரும் இறுதியாகக் கடந்த ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதி அன்று ஹைட்ராக்சிகுளோரோகுவின் பற்றிப் பேசி உள்ளன்ர். ஏற்கனவே இந்திய அரசு நேற்று சீனாவுடன் நேரடி தொடர்பில் உள்ளதாகவும் அதிகார மட்ட மற்றும் ராணுவ மட்ட பேச்சுவார்த்தைகள் நடப்பதாகவும் தெரிவித்துள்ளது” என அறிவிக்கப்பட்டுள்ளது.