வாஷிங்டன்

எஸ் தீவிரவாத தலைவன் அல் பாக்தாதி மரணத்தின் போது காயமடைந்த அமெரிக்க ராணுவ நாயின் புகைப்படத்தை டிரம்ப் வெளியிட்டார்.

சிரியா, ஈராக்கின் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஐஎஸ் தீவிரவாத அமைப்பு உலகெங்கிலும் பல்வேறு நாச வேலைகளைச் செய்தது. இந்த அமைப்பின் தலைவனாக அபு பக்கர் அல் பாக்தாதி பொறுப்பேற்ற பிறகு, ஐஎஸ்  அமைப்பின் கொடூரமான செயல்கள் தீவிரமடைந்தன. உலக நாடுகளை இந்த இயக்கத்தின் பிணைக்கைதிகளைக் கழுத்தறுத்துக் கொல்லுதல்,

சிரியாவில் சட்டத்தை மீறுபவர்களுக்கு மன்னிப்பில்லாத மரண தண்டனை, பெண்களுக்குப் பலாத்கார சித்ரவதை போன்ற செயல்கள் அச்சம் கொள்ள வைத்தன. அல் பாக்தாதியின்  தலைக்கு ரூ.70 கோடி பரிசுத் தொகையை அமெரிக்கா அறிவித்தது. சிரியாவின் வடமேற்கில் உள்ள இட்லிப் மாகாணத்தில் பதுங்கியிருந்த பாக்தாதி, அமெரிக்க ராணுவ சிறப்புப் படையினர் நடத்திய ரகசிய தாக்குதலில் இறந்து விட்டதாக அதிபர் டிரம்ப் அறிவித்திருப்பது உலகம் முழுவதும் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது.

சிரியா  நேரப்படி கடந்த சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் இட்லிப் மாகாணத்தின் புறநகர்ப் பகுதிகளில் பாக்தாதி பதுங்கியிருப்பதாக அமெரிக்காவுக்கு உளவு தகவல்கள் கிடைத்துள்ளன.  மிகவும் அபாயகரமான இப்பகுதிகளில் மிகத் தாழ்வான உயரத்தில் பறந்த ஹெலிகாப்டர்கள் சுமார் 1 மணி நேரம் 10 நிமிடங்கள் பயணம் செய்து, பாக்தாதி பதுங்கியிருந்த கட்டிடத்தைச் சுற்றி வளைத்தன.

கட்டிடத்தின் முன்புற வாசலில் வெடிகுண்டுகள்  புதைத்து வைக்கப்பட்டிருந்ததால், கட்டிடத்தின் பின்பக்க சுவரை ராணுவத்தினர் குண்டுவீசித் தகர்த்தனர். கட்டிடத்துக்குள் அதிரடியாக மோப்ப நாய்களுடன், உள்ளே நுழைந்த அமெரிக்கப் படையினருடன் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சண்டை நடத்தினர். இந்த சண்டையில் சில நொடிகளில் தீவிரவாதிகளைச் சுட்டுத் தள்ளிவிட்டு முன்னேறிய வீரர்கள், அங்கிருந்த 11 குழந்தைகள் உள்ளிட்ட  சிலரை பிடித்துள்ளனர்.  மற்றும் சிலர் சரணடைந்தனர்.

அல் பாக்தாதியின் நெருங்கிய கூட்டாளிகள் உள்ளிட்ட பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அமெரிக்க வீரர்கள் சுற்றிவளைத்த தகவல் அறிந்ததும், அல் பாக்தாதி தனது 3 மகன்களுடன் ரகசிய  சுரங்கப்பாதைக்குள் ஒளிந்து கொள்ளத் தப்பி உள்ளான்.

ஆனால் அமெரிக்க ராணுவத்தின் மோப்ப நாய் பாக்தாதியை மோப்பம் பிடித்து விரட்டிக் கொண்டு சுரங்கப்பாதைக்குள் நுழைந்தது. தன்னால் தப்பிக்க முடியாது என்பதை உறுதி செய்த பாக்தாதி, உடலில் கட்டியிருந்த சக்திவாய்ந்த  வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து மகன்களுடன் தற்கொலை செய்து கொண்டான்.

அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கையில் ஒரு அமெரிக்க வீரர் கூட பலியாகவில்லை எனினும் மோப்ப நாய் மட்டும் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாக்குதல் குறித்துக் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை அதிபர் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக  அறிவித்தார்.   அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் காயமடைந்த நாயின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.  மேலும் தற்போது அந்த நாய் உடல்நிலை சீராக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.   அந்த நாயின் பெயர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

அல் பாக்தாதியின் உடல் கிடைக்காததால் மரபணு பரிசோதனை மூலம் அவன் மரணம் அடைந்தது தெரிய வந்துள்ளது.  இதற்காக அவனுடைய உள்ளாடைகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.   அல் பாக்தாதி மரணம் குறித்து ரஷ்யா உள்ளிட்ட  பல நாடுகள் சந்தேகத்தில் உள்ளதால் டிரம்ப் இந்த தாக்குதல் குறித்த வீடியோவை வெளியிட ஆலோசித்து வருவதாக கூறி உள்ளார்.