ஏராளமான அதிருப்தி கருத்துகள் இருந்தன, சண்டைகள் இருந்தன. அவற்றை எல்லாம் ஒரு தந்தையைப் போல பிரதமர் நரேந்திர மோடி ஒன்றுபடுத்தியுள்ளார். அவரை இந்தியாவின் தந்தை என்று கூறலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் செவ்வாய்க்கிழமை நடந்த சந்திப்புக்குப் பின் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த இந்த இருவரும் ஒருவரை ஒருவர் பாராட்டினர். இந்தியாவுடன் விரைவில் அமெரிக்கா வணிக ஒப்பந்தம் செய்துகொள்ளும் என்று தெரிவித்தார் டிரம்ப்.
அத்துடன், “இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் ஒருவரை ஒருவர் அறிந்துகொண்டால் இருவரும் ஒத்துப் போவார்கள்; அவர்கள் சந்திப்பில் இருந்து பல நல்ல விஷயங்கள் வரும்” என்று தாம் நம்புவதாக டிரம்ப் தெரிவித்தார்.
அல்காய்தாவுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.எஸ். பயிற்சி அளித்ததாக பாகிஸ்தான் பிரதமர் ஒப்புக்கொண்டதை சுட்டிக்காட்டி கேள்வி கேட்டபோது, “அதை பிரதமர் மோடி பார்த்துக்கொள்வார்” என்று டிரம்ப் பதில் சொன்னார்.
ஹூஸ்டன் வந்திருந்து தன்னுடைய நேரத்தை செலவிட்டதற்காக அவருக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.
இந்தியாவின் பெட்ரோநெட் நிறுவனம் ஆற்றல்துறையில் 2.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள முதலீட்டு உடன்படிக்கையில் அமெரிக்காவுடன் கையெழுத்திட்டிருப்பதால் வணிகத்தைப் பொறுத்தவரை தமக்கு மகிழ்ச்சி என்று தெரிவித்தார் மோடி.