வாஷிங்டன்: அமெரிக்க காங்கிரஸின் மேலவையான செனட் சபையில் கண்டன தீர்மானம் தொடர்பாக நடந்த விசாரணையிலிருந்து அதிபர் டொனால்டு டிரம்ப் விடுவிக்கப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க அதிபர் பதவிக்கு இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடக்க உள்ளது. இதில் மீண்டும் போட்டியிட உள்ள தற்போதைய அதிபரும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவருமான டிரம்ப், தன்னை எதிர்த்து போட்டியிட உள்ள ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடனை தோற்கடிக்க, உக்ரைன் அதிபர் மூலம் ஊழல் குற்றச்சாட்டில் தொடர்புபடுத்த முயன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

இதனையடுத்து, அவர்மீது எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி, அமெரிக்க நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் கொண்டு வந்தது.

ஜனநாயகக் கட்சிக்கு பெரும்பான்மை உள்ள பிரதிநிதிகள் சபையில், இந்த தீர்மானம் வெற்றிபெற்றது. அதையடுத்து, சென்ட் சபையின் விசாரணைக்கு வந்தது. ஆனால் இங்கு டிரம்பின் குடியரசு கட்சிக்குத்தான் பெரும்பான்மை உள்ளது. அதனால், இத்தீர்மானம் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பில்லை.

இந்நிலையில் செனட் சபையில், டிரம்பின் பதவிநீக்கம் குறித்து ஏற்கனவே விவாதம் துவங்கியுள்ள நிலையில், மீண்டும் இறுதிகட்ட விசாரணை நடந்தது.

விசாரணை நிறைவடைந்த பிறகு நடைபெற்ற ஓட்டெடுப்பில், டிரம்ப்பை விடுவிப்பதை ஆதரித்து 52 செனட் உறுப்பினர்களும், எதிர்த்து 47 செனட் உறுப்பினர்களும் ஓட்டளித்தனர். இதன்வாயிலாக, செனட் சபை விசாரணையிலிருந்து டிரம்ப் விடுவிக்கப்பட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.