கான்பரா: கொரோனா சீனாவின் வூஹான் நகரத்தில் இருந்து வந்த 243 ஆஸ்திரேலியர்களை 2,700 கி.மீ. துாரத்தில் உள்ள தீவிற்கு அனுப்பிவைத்து தனிமைப்படுத்தியுள்ளது ஆஸ்திரேலிய அரசு.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 89 குழந்தைகள் உட்பட 243 பேர், சீனாவின் வூஹான் நகருக்குச் சென்றிருந்தனர். அந்நகரம் கடுமையான முறையில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானதால், உருவாகி பலரது உயிரைக் குடித்ததால் ஆஸ்திரேலியர்கள் அனைவரும் அங்கிருந்து தப்பி தாயகம் திரும்பினர். ஆனால், இவர்களால் நாட்டிலுள்ள இதர மக்களுக்கும் கொரோனா வைரஸ் தாக்க வாய்ப்புள்ளதாக ஆஸ்திரேலிய அரசு கருதியது.

இதையடுத்து, வூஹானில் இருந்து வந்தவர்களை தனிமைப்படுத்தி மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் வைக்க முடிவு செய்தனர். அதன்படி, ஆஸ்திரேலியாவில் இருந்து 2,700 கி.மீ. துாரத்தில் இந்தோனேசியாவிற்கு அருகில் உள்ள ‘கிறிஸ்துமஸ் தீவிற்கு’ அனைவரையும் அனுப்பியுள்ளனர். அந்த தீவில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ முகாமில் அவர்கள் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

ஆஸ்திரேலிய அரசின் இந்தச் செயலுக்கு அந்நாட்டில் கடுமையான எதிர்ப்பு எழுந்து வருகிறது. ஆனாலும், ஆஸ்திரேலியா அரசு தனது முடிவில் இருந்து பின்வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.