வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு.. பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட ட்ரம்ப்..
அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்துக்கொண்டிருந்தார்.
அப்போது வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.
துப்பாக்கியால் சுடும் சத்தத்தைக் கேட்ட ட்ரம்ப்பின் பாதுகாவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அவர்கள், ட்ரம்ப்பைச் செய்தியாளர்கள் அறையில் இருந்து பாதுகாப்பாக வெளியே அழைத்துச் சென்றனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சிறிது நேரத்தில் மீண்டும் செய்தியாளர்கள் அறைக்கு வந்த ட்ரம்ப்’’ வெளியே துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. ஆனால் ஆபத்து ஏதும் இல்லை. உளவுத்துறை அதிகாரிகள் சிறப்பாகச் செயல் பட்டுள்ளனர்’’ என்று சொல்லி விட்டு நகர்ந்தார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து வெள்ளை மாளிகை மூடப்பட்டது.
வெள்ளை மாளிகை அருகே ட்ரம்ப் பேட்டி அளித்த நேரத்தில் ஆயுதம் தாங்கிய மர்ம ஆசாமி நின்று கொண்டிருந்ததாகவும், அவனைப் பாதுகாப்பு அதிகாரிகள் துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது.
இதில் காயம் அடைந்த மர்ம ஆசாமியும், ஒரு பாதுகாவலரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
-பா.பாரதி.