நியூயார்க்

மெரிக்க குடியுரிமை பெற்றவர்கள் பலர்  தங்கள் குடியுரிமையைத் திரும்ப அளித்து வருவதாக ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

அமெரிக்காவில் வசிக்கும் பல வெளிநாட்டினருக்கு அந்நாட்டுக் குடியுரிமையைப் பெறுவதில் மிகுந்த நாட்டம் உள்ளது.   இதையொட்டி அமெரிக்க குடியுரிமை பெறுவதற்கான விதிமுறைகளை அரசு கடுமையாக்கி உள்ளதால் பலருக்கு உடனடியாக அமெரிக்கக் குடியுரிமை கிடைக்காத நிலை உள்ளது.  எனவே எச்1பி விசா பெற்று இங்குப் பணி புரியும் பல வெளிநாட்டினர் அமெரிக்கக் குடியுரிமை பெறக் காத்துள்ளனர்.

நியூயார்க் நகரைச் சேர்ந்த பாம்பிரிட்ஜ் அக்கவுண்டண்ட் எனும் நிறுவனம் அமெரிக்காவில் மற்றும் இங்கிலாந்தில் வசிக்கும் வெளிநாட்டினர் செலுத்தும் வரி விகிதங்களைக் கொண்டு ஒரு ஆய்வு ஒன்றை நடத்தி உள்ளது.  இந்த ஆய்வில் ஒவ்வொரு 3 மாதமும் அமெரிக்க அரசு தெரிவிக்கும் குடியுரிமையைத் திரும்ப அளிப்போர் விவரங்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில் கடந்த 2020 ஆம் வருடம் முதல் ஆறு மாதங்களில் 5800க்கும் அதிகமானோர் தங்கள் அமெரிக்கக் குடியுரிமையைத்  திரும்ப அளித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.  இதற்கு அமெரிக்க அதிபர் டிரம்பின் நடவடிக்கைகள் மீது மக்களுக்கு எழுந்துள்ள அதிருப்தி முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது.

இது குறித்து இந்நிறுவன பங்குதாரர் அலிஸ்டர் பாம்பிரிட்ஜ், “ஏற்கனவே பலர் இங்கு வசித்தது போதும் என முடிவு செய்து அமெரிக்கக் குடியுரிமையைத் துறந்து நாட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.   அதிபர் டிரம்ப் கொரோனா பரவுதலைக் கையாண்ட விதம், மற்றும் அரசியல் நடவடிக்கைகள் ஆகியவை மக்களில் பலருக்கு அதிருப்தி அளித்துள்ளது.

எனவே இவர்கள் அமெரிக்க குடியுரிமையைத் துறந்துள்ளனர்.  வெளிநாடுகளில் வசிக்கும் அமெரிக்க குடிமக்கள் வருமான வரி கணக்கை ஒவ்வொரு வருடமும் சமர்ப்பிக்க வேண்டும்.   மேலும் இவர்கள் வெளிநாட்டில் இருந்தாலும் அமெரிக்காவுக்கு ஏராளமான வரி செலுத்தும் நிலை உள்ளது.

இதுவும் பலர் அமெரிக்கக் குடியுரிமையைத் திரும்ப அளிப்பதற்கு ஒரு காரணமாகும்.   குடியுரிமையைத் திரும்ப அளிப்போர் 2300 டாலர் வரி செலுத்த வேண்டும் என்னும் விதி உள்ள போதும் பலர் அதற்காகக் கலங்குவதில்லை.

வரும் நவம்பர் மாதம்  அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.  இந்த தேர்தல் முடிவுக்காக ஏராளமானோர் காத்திருக்கின்றனர்.   அதிபர் டிரம்ப் மீண்டும்  தேர்வு செய்யப்பட்டால் மேலும் பலர் தங்கள் குடியுரிமையைத் திரும்ப அளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.