அமெரிக்க அதிபராக சமீபத்தில் பொறுப்பேற்ற டொனால்டு டிரம்ப், அதிரடி நடவடிக்கையாக ஈரான், சிரியா உள்ளிட்ட 7 முஸ்லீம் நாடுகளில் உள்ள குடிமக்களுக்கு அமெரிக்க விசாவை தடை செய்தார். இதற்கு பதிலடியாக ஈரான் அரசு தனது நாட்டில் நுழைவதற்கு அமெரிக்கர்களுக்கு தடை விதித்தது.
மேலும், ட்ரம்ப் இவ்வளவு காலம் வேறு உலகில் வசித்துவிட்டு இப்போதுதான் அரசியல் உலகிற்குள் அடியெடுத்து வைத்திருப்பதாகவும் அவரது அரசியல் வருகை ஆபத்தானது என்றும் ஈரான் அதிபர் ஹாசன் ருஹானி கருத்து தெரிவித்துள்ளார். இதற்கிடையே ஈரான் அரசு கடந்த சில நாட்களுக்கு முன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்தது.
ஈரானின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வந்தது. அதையடுத்து இன்று ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் விடுத்துள்ள செய்தியில், ஈரான் கண்காணிக்கப்படுகிறது என்றும், நல்லவேளையாக அமெரிக்காவுடன் மேற்கொண்ட அணுசக்தி ஒப்பந்தத் தால் பிழைத்துக் கொண்டிருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
டிரம்ப்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் பிலின், ஈரானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். ஈரானின் எதிர்ப்பு மற்றும் ஏவுகணை சோதனை குறித்து மைக்கேல் பிலின் கூறுகையில், “ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை மீறும் வகையில் ஈரான் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. இதன்மூலம் மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் மற்றும் அதற்கு அப்பாலும் ஈரான் பதற்றத்தை அதிகரிக்க முயல்கிறது. எனவே ஈரான் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஈரானின் செயல்களைக் கண்டு அமெரிக்க ஒன்றும் செய்யாமல் இருக்காது” என்றார்.
ஈரான் – அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தப்படி, அணுஆயுதங்களைக் கொண்ட ஏவுகணைகளை ஈரான் சோதிக்கக் கூடாது. ஆனால் கடந்த ஜனவரி 23ம் தேதியும் கடந்த டிசம்பர் 6ம் தேதியும் அணு ஆயுதங்களைக் கொண்ட ஏவுகணை சோதனைகளை ஈரான் நடத்தியுள்ளது. அதனால் தான் அமெரிக்கா தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா மீ்ண்டும் பொருளாதார தடைகளை விதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.