அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மைக் வால்டஸ் நியமிக்கப்பட இருப்பதாக அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

புளோரிடா மாகாண பிரதிநிதியான மைக் வால்டஸ், கொரில்லா தாக்குதலில் கைதேர்ந்த அமெரிக்க ராணுவத்தின் க்ரீன் பெரெட் படைப்பிரிவில் இடம்பெற்றிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

50 வயதாகும் மைக் வால்டஸ் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு அமெரிக்க ராணுவம் மற்றும் தேசிய பாதுகாப்பு படையில் 27 ஆண்டுகள் பணியாற்றியதோடு ஆப்கானிஸ்தான், மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவில் போர் புரிந்த அமெரிக்க ராணுவ படையில் பணியாற்றியுள்ளார்.

ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராக எலிஸ் ஸ்டெபானிக் மற்றும் அமெரிக்க எல்லை பாதுகாப்பு தலைவராக டாம் ஹோமன் போன்ற ‘அமெரிக்கா பர்ஸ்ட்’  (America First) என்ற கொள்கையை பிரதிபலிப்பவர்களை டிரம்ப் நியமனம் செய்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக வெளியுறவுக் கொள்கையில் அனுபவமுள்ள இராணுவ அதிகாரியான வால்ட்ஸைச் சேர்ப்பது, அமெரிக்காவை முன்னிலைப் படுத்தும் ராஜதந்திர அணுகுமுறைக்கு டிரம்ப் அளித்துவரும் முன்னுரிமையை எடுத்துக்காட்டுவதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்திய அமெரிக்க நல்லுறவு கூட்டமைப்பான இந்தியா காக்கஸ்-ன் துணை தலைவராக உள்ள மைக் வால்டஸ் நியமனம் இந்தியாவுக்கு சாதகமாக அமையும் என்று கூறப்படுகிறது.

இருப்பினும், இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்க ஆதிக்கத்தை வலியுறுத்தி வரும் வால்டஸ் சீனாவை தீவிரமாக விமர்சித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவில் சிறுபான்மை முஸ்லிம்களான உய்கர் விவகாரம் மற்றும் கொரோனா பரவல் மற்றும் தைவான் விவகாரம் ஆகியவற்றில் இவர் சீனாவுக்கு எதிராக தொடர்ச்சியாக கடும் குரல் எழுப்பி வருகிறார்.

தவிர, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ஆதிக்கம் செலுத்துவதை விட இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்க ராணுவத்தின் இருப்பை வலியுறுத்தி தொடர்ந்து வாதிட்டு வருகிறார்.

இந்தியாவுடன் சீனா சமீபத்தில் கைகுலுக்கி எல்லையில் இருந்து தள்ளி சென்ற நிலையில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மைக் வால்டஸ் பதவியேற்க இருப்பது இந்தியா சீனா நட்புறவை மீண்டும் கேள்விக்குறியாக்கிவிடும் என்று அஞ்சப்படுகிறது.