அமெரிக்காவில் இதுவரை நடைமுறையில் இருந்த “ஆண்களுக்கு தினமும் 2 டிரிங்க்ஸ் (3 அவுன்ஸ் மது பானம்), பெண்களுக்கு 1 டிரிங்க்ஸ்” என்ற ஆலோசனையை டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு கைவிட்டுள்ளது.
2025–2030 காலத்துக்கான புதிய உணவு மற்றும் ஊட்டச்சத்து வழிகாட்டுதல்களில், மதுபானம் குறித்து தெளிவான அளவு குறிப்பிடப்படாமல், “மதுபானம் குறைவாக குடித்தால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்” என்ற பொதுவான அறிவுரை மட்டும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழிகாட்டுதல்கள் மருத்துவ ஆலோசனைகள், பள்ளி மதிய உணவுத் திட்டங்கள் உள்ளிட்ட பல அரசுக் கொள்கைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
மத்திய மருத்துவ சேவை நிர்வாகத் தலைவர் மேஹ்மெட் ஓஸ் கூறுகையில், “மதுபானம் குடிக்கவே கூடாது என்பதே சிறந்தது. ஆனால் நண்பர்களுடன் சந்தோஷமாக சமூகமாக பழகுவதற்கு சிலர் அதை பயன்படுத்துகிறார்கள். அதற்கு ஆதாரமான ஆரோக்கிய நன்மைகள் இல்லை” என்றார்.
மேலும், “ஆண்களுக்கு 2, பெண்களுக்கு 1 என்ற கணக்கு அறிவியல் ஆதாரத்துடன் இல்லை” என்றும் அவர் தெரிவித்தார்.
கிரீஸ், இத்தாலி, ஜப்பான் போன்ற நாடுகளில் மக்கள் நீண்ட ஆயுள் வாழ்வதற்கு, அவர்கள் மிகக் குறைவாகவும், கொண்டாட்ட நேரங்களில் மட்டும் மது அருந்துவதும் ஒரு காரணம் என்றார்.
அமெரிக்காவை மீண்டும் ஆரோக்கியமானதாக மாற்றுவோம் (‘Make America Healthy Again’)என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக இஞ்ச புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இதில், அதிக புரதம் (Protein) எடுத்துக் கொள்ள வேண்டும், சர்க்கரை குறைக்க வேண்டும், அதிகமாக செயலாக்கப்பட்ட (Processed) உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஆனால் பல சுகாதார அமைப்புகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
“தெளிவான அளவு சொல்லாமல் உங்கள் லிமிட் தெரிந்து நீங்களே லைட்டா சாப்பிடுங்க என்பதால் லிமிட்டா தான் இருக்கிறோம் என்று நினைத்து அதிகமாக குடிக்க வாய்ப்பு உள்ளது. இது பொதுச் சுகாதாரத்திற்கு ஆபத்து” என எச்சரித்துள்ளன.
உலக சுகாதார நிறுவனம் (WHO) உள்ளிட்ட அமைப்புகள்,
“சிறிதளவு மதுபானம் கூட புற்றுநோய் உள்ளிட்ட நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும்” என்று ஏற்கனவே தெரிவித்துள்ளன.
மதுபானம் குறித்து தெளிவான வரம்புகளை நீக்கி, பொதுவான அறிவுரை மட்டும் வழங்கியுள்ள டிரம்ப் அரசின் இந்த முடிவு, ஆரோக்கிய நிபுணர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
[youtube-feed feed=1]