திருவனந்தபுரம்: கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரம் உள்பட  3 விமான நிலையங்களை பொதுத்துறை – தனியார் கூட்டுமுயற்சியில் குத்தகை விடும் நடவடிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி இருப்பதற்கு கேரள முதல்வர் பினராயிவிஜயன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற கேபினட் கூட்டத்தில், இந்திய விமான நிலைய ஆணையத்தின் ஜெய்ப்பூர், கவுகாத்தி, திருவனந்தபுரம் ஆகிய மூன்று விமான நிலையங்களை பொதுத்துறை தனியார் கூட்டுமுயற்சியில் குத்தகைக்கு விடுவதற்கான கருத்துருவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி, தற்போது  இந்திய விமானநிலைய ஆணையம் நடத்திய ஏலத்தை கைப்பற்றி உள்ள, அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு,  அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்த 3 விமான நிலையங்களை குத்தகைக்கு விடுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதானி நிறுவன தலைவர் பிரதமர் கவுதம் அதானி  மோடியின் நண்பர் என்பதும், அவர் குஜராத்தைச் சேர்ந்தவர் என்பதும், ஏற்கனவே பல துறைமுகங்களை கைப்பற்றி உள்ளதும்  அனைவரும் அறிந்ததே.

குறிப்பிட்ட இந்த 3  விமான நிலையங்கள், விமானநிலைய சேவை தரத்திற்கான, சர்வதேச விமான நிலையங்கள் கவுன்சில் பட்டியலில் முதல் 5 இடங்களை தொடர்ந்து பிடித்து வந்துள்ளன. இந்த நிலையில், விமான நிலையம் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக,  இந்திய விமான நிலைய ஆணையம், 14.12.2018 அன்று கருத்துரு வெளியிட்டது. பயணிகள் கட்டண அடிப்படையில் சர்வதேச ஏலப்போட்டி மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. அதைத்தொடர்ந்து, அது தொடர்பாக தொழில்நுட்ப ஏல விண்ணப்பங்கள் 16.02.2019 –இல் திறக்கப்பட்டன. தகுதிபெற்ற போட்டியாளர்களின் நிதி விண்ணப்பங்கள் 25.02.2019/26.02.2019 தேதிகளில் திறக்கப்பட்டன.

அதில், அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம், ஜெய்ப்பூர், குவகாத்தி, திருவனந்தபுரம் ஆகிய மூன்று விமானநிலையங்களுக்குமான அனைத்து ஏலப்போட்டிகளிலும் பயணிகள் கட்டண விகிதத்தின் அடிப்படையில் அதிக தொகை குறிப்பிட்டு வெற்றி பெற்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், திருவனந்தபுரம் விமான நிலையத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் மோடி அரசின் முடிவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் பிரதமருக்கு காட்டமாக கடிதம் எழுதி உள்ளார். அதில்,  திருவனந்தபுரம் விமான நிலையத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை மத்திய அரசு கைவிடவேண்டும். கடந்த 2003-ம் ஆண்டு சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அளித்த உத்தரவாதத்தை மீறும் வகையில் மத்திய அரசின் முடிவு இருக்கிறது.

மாநில அரசு தரப்பின் வாதங்களை கவனத்தில் கொள்ளாமல் மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவு ஒருதலைபட்சமானதாகும். கேரள மக்களுக்கு விருப்பமில்லாத இந்த முடிவை செயல்படுத்தினால், மத்திய அரசுக்கு போதிய ஒத்துழைப்பை வழங்குவதில் சிரமம் ஏற்படும். எனவே இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.