அகர்தலா
மேற்கு வங்க பாஜக தலைவர் ஒருவருக்கு அரசுப் பணி அளிக்க திரிபுரா மாநில ஆளுநர் பரிந்துரை செய்ததாக கம்யூனிஸ்ட் கட்சியினர் குற்றம் சாட்டி உள்ளனர்.
திரிபுரா மாநிலத்தின் ஆளுனர் தாதகடா ராய் ஆவார். இவர் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர். தற்போது பாஜகவின் பிப்லாப் தேப் திரிபுராவின் முதல்வராக பதவி வகித்து வருகிறார். வெகுநாட்களாக ஆட்சி புரிந்து வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியை இழந்து தற்போது எதிர்க்கட்சியாகி உள்ளது. தற்போது கம்யூனிஸ்ட் கட்சி ஆளுநர் மீது குற்றச்சாட்டு ஒன்றை கூறி உள்ளது.
திரிபுரா ஆளுனர் தாதகடா ராய் சமீபத்தில் திரிபுரா முதல்வர் பிப்லாப் தேபுக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். அந்தக் கடிதத்தில் தன்னுடன் கட்சிப் பணிபுரிந்த பாஜகவை சேர்ந்த சர்வதமன் ராய் என்பவருக்கு அரசுப் பணி அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதியிட்ட அந்தக் கடிதத்தில் சர்வதமன் ராய் ஒரு தேர்ந்த கணக்காளர் எனவும் அவருக்கு அரசு நிறுவன கணக்குகளை கவனிக்க பணி அளிக்க வேண்டும் எனவும் ஆளுநர் கூறி உள்ளார்.
இது குறித்து கம்யூனிஸ்ட் கட்சி ஆளுநர் தனது கட்சிக்காரருக்கு அரசுப்பணி அளிக்கக் கோரியதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தற்போது முதல்வரின் அலுவலகத்துக்கு மூன்று நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளதால் முதல்வரின் அலுவலகம் இது குறித்து எந்த ஒரு விளக்கமும் அளிக்கவில்லை. கவர்னரின் செயலர் இது குறித்து தமக்கு எதுவும் தெரியாது என கூறி உள்ளார்.
நேற்று இரவு ஆளுநர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “நான் தான் அந்த கடிதத்தை எழுதினேன். இது ஒன்றும் ரகசியக் கடிதம் இல்லை. இது சாதாரணமான கடிதம். நான் அந்தப் பணிகளுக்கு சர்வதமன் ராய் பொருத்தமானவர் என்பதால் அந்தக் கடிதத்தை எழுதினேன். ஆனால் கம்யூனிஸ்ட் கட்சியினர் கொலம்பஸ் அமெரிக்காவை கண்டு பிடித்தது போல என்னைப் பற்றி தாங்கள் கண்டுபிடித்ததாக கூறி தங்களைத் தாங்களே முட்டாள் ஆகிக் கொள்கின்றனர்” என கூறி உள்ளார்.