அகர்தலா:
பொது இடங்களில் சர்ச்சை பேச்சுக்களை வெளியிட்டு கண்டனங்களுக் ஆளாவதில் திரிபுரா முதல்வர் பிப்லால் தெப் தற்போது முதலிடத்தில் உள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு கைத்தறி விற்பனை தொடக்க விழாவில் உலக அழகி போட்டி குறித்து பேசினார். அப்போது 1997ம் ஆண்டு உலக அழகி போட்டியில் வெற்றி பெற்ற இந்தியாவை சேர்ந்த டயானா ஹெய்டன் அந்த பட்டத்துக்கு தகுதியற்றவர் என்று பேசினார். இதற்கு சமூக வலை தளங்களில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. டயானாவே முன்வந்து கண்டித்தார்.
இந்நிலையில் நேற்று சிவில் சர்வீஸ் தினம் கொண்டாடப்பட்டது. இது தொடர்பாக நடந்த ஒரு விழாவில் முதல்வர் பிப்லால் தெப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‘‘ ஒரு காலத்தில் மனிதாபிமான பின்னணி கொண்டவர்கள் சிவில் சர்வீஸ் தேர்வுகளை வழக்கமாக எழுதினர். ஆனால், தற்போது டாக்டர்கள், இன்ஜினியர்கள் இந்த தேர்வுகளை எழுதுகின்றனர்.
சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு மெக்கானிக்கல் இன்ஜினியர்கள் ஒத்துவரமாட்டார்கள். அதேசமயம் சிவில் இன்ஜினியர்கள் சிவில் சர்வீஸ் தேர்வு எழுத தகுதியானவர்கள். அடுத்த 3 ஆண்டுகளில் மேற்குவங்கத்தை விட திரிபுரா மாநிலம் வளர்ச்சி அடையும் என்பதை மம்தா பானர்ஜிக்கு தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.