டில்லி:

பாரம்பரிய சின்னங்களை தத்தெடுக்கும் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் டால்மியா பாரத் குழுமம் டில்லி செங்கோட்டையை 5 ஆண்டுகளுக்கு தத்தெடுத்துள்ளது.

இதற்கான நடந்த ஏலத்தில் கலந்துகொண்ட இண்டிகோ விமான நிறுவனம், ஜிஎம்ஆர் குழுமம் ஆகியவற்றை பின்னுக்கு தள்ளி ரூ. 25 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தை டால்மியா பாரத் குழுமம் வென்றுள்ளது.

மத்திய சுற்றுலா துறை மற்றும் தொல்பொருள் சர்வே துறைக்கும் இடையே டால்மியா நிறுவனம் கடந்த 9ம் தேதி ஒப்பந்தம் செய்துள்ளது. எனினும் இது குறித்த அறிவிப்பு கடந்த 24ம் தேதி தான் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் உயர் பாரம்பரிய நினைவு சின்னங்களை தனியார் மற்றும் அரசு பங்களிப்புடன் தத்தெடுக்கும் திட்டம் கடந்த செப்டம்பரில் அறிமுகம் செய்யப்பட்டது. இதை ஏலம் எடுக்கும் நிறுவனம் தான் நினைவு சின்னத்தில் சுற்றுலா கட்டமைப்புகளை கட்டுமானித்தல், இயக்குதல், பராமரித்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்த வகையில் நாட்டில் உள்ள 105 நினைவுச் சின்னங்களை ஒப்படைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில் முதலாவதாக டில்லி செங்கோட்டை தற்போது ஏலம் விடப்பட்டுள்ளது. முதல் நிறுவனமாக டால்மியா பாரத் குழுமம் செங்கோட்டையை ஏலம் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.