புதுடெல்லி: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் மகுவா மோய்த்ரா, இந்த நாட்டில் ஃபாசிஸம் நிலவுவதற்கான 7 தொடக்க நிலை அடையாளங்களும் தெளிவாக வெளிப்படுவதாக கூறி அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார்.
இவர், முதன்முறையாக மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பாரதீய ஜனதா தரப்பிலிருந்து பலமுறை எதிர்ப்பு எழுந்தபோதும் இவர் தனது பேச்சை தீர்க்கமாக தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் கூறியதாவது, “நாடாளுமன்றத்தில் யாருக்கு அதிக எண்ணிக்கை இருக்கிறது என்பது முக்கியமில்லை. அதற்காக பிறர் அமைதியாக இருக்க வேண்டும் என்பதும் விதியில்லை. எதிர்ப்பை பதிவுசெய்தல் என்பது மிகவும் முக்கியமானது.
நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் பாதுகாப்பதாய் உறுதிமொழி எடுத்துக்கொண்ட இந்திய அரசியலமைப்பு சட்டம் இன்று பெரும் ஆபத்தில் இருக்கிறது. நாம் நமது கண்களை சற்று திறந்து பார்த்தால், நாட்டின் பலவிதமான மக்கள் எப்படி மோசமாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.
வெறுமனே கண்களை மூடிக்கொண்டு இந்தியப் பேரரசு என்பதைப் பற்றி நீங்கள் பேசலாம். ஆனால், ஃபாசிஸம் தலையெடுத்துள்ளதற்கான 7 முக்கியமான ஆரம்பநிலை அறிகுறிகளும் இன்று நம் நாட்டில் தெளிவாக தென்படுகின்றன” என்று தனது எதிர்ப்பை கடுமையாக பதிவுசெய்தார்.
அந்த 7 தொடக்கநிலை அறிகுறிகள்:
* வலிமையான மற்றும் தொடரும் தேசியவாத கோஷம்
* மனித உரிமைகள் அலட்சியம் செய்யப்படுதல்
* ராணுவ மேன்மை
* பெருமளவிலான பாலியல் முறைகேடுகள்
* ஜனரஞ்சக ஊடகங்களை கட்டுப்பாட்டிற்குள் வைத்தல்
* தேசியப் பாதுகாப்பு குறித்த தேவையற்ற வலியுறுத்தல்கள்
* அரசியலுடன் மதம் கலப்பது