சென்னை:
திருச்சியில் போக்குவரத்து காவலரால் வாகனத்தின்மீது எட்டி உதைக்கப்பட்டபோது, அதிலிருந்து விழுந்து இறந்த கர்ப்பிணியான இளம்பெண் உஷாவின் மரணம் கிரிமினல் குற்றம் என்று சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கருத்து தெரிவித்து உள்ளார.
திருச்சி அருகே உள்ள திருவெறும்பூர், போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் எட்டி உதைத்ததில் திருச்சியில் கர்ப்பிணி பெண் உஷா சம்பவ இடத்திலேயே மரணம அடைந்தார்.
போக்குவரத்துக் காவலரின் மோசமான நடவடிக்கையால் கர்ப்பிணி உயிரிழந்ததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.. இரவு 7.30 மணியளவில் தொடங்கிய போராட்டத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். இதன் காரணமாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பல பேருந்துகள் மீதும் கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
இதையடுத்து போராட்டக்காரர்களுடன் போலீசார், அரசு அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் பொதுமக்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இதில் பலருக்கும் காயம் ஏற்பட்டது.
காவலர் காமராஜ் தற்காலிக இடை நீக்கம் செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டாலும், அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று உஷாவின் உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இதுகுறித்து வழக்கறிஞர் அஷ்வதாமன், டிராபிக் ராமசாமி ஆகியோர் நீதிமன்றம் தாமாக முன்வந்து (சுமோட்டோ) விசாரிக்க வேண்டும் என முறையிட்டனர்.
இதை விசாரித்த தலைமை நீதிபதி, இளம்பெண் மரணமடைந்த விவகாரம் கிரிமினல் குற்றத்திற்கு சமமான செயல் என்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் போலீஸாரின் நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது; சட்டவிரோதமான செயல் என்று கூறிய அவர், இதுகுறித்து தனியாக மனு தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தினார்.