திருச்சி வட்டார போக்குவரத்து அதிகாரி (RTO) தனது மனைவியுடன் சேர்ந்து ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

RTO சுப்பிரமணி மற்றும் அவரது மனைவி பிரமிளா இருவரும் நாமக்கல் அருகே உள்ள வகுரம்பட்டி ரயில் நிலையம் அருகே இன்று அதிகாலை 4 மணியளவில் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

சுப்பிரமணியின் மனைவி பிரமிளா ஆண்டாபுரம் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவருக்கும் ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

இவர்களின் பிரேதத்தை கைப்பற்றிய காவல்துறையினர் இவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கொங்கு வேளாள கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த சுப்பிரமணி – பிரமிளா தம்பதியின் மகள் மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஒரு பையனை காதலிப்பதாகவும் அதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் அதனை ஏற்காமல் மகள் பிடிவாதமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, இவர்கள் தற்கொலைக்கு மகளின் காதல் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதை அடுத்து காவல்துறையினர் இது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.