திருச்சி: தவெக தலைவர் விஜய்யின் திருச்சி பிரச்சாரத்துக்கு கடுமையான கெடுபிடிகளை ஏற்படுத்தி உள்ள தமிழ்நாடு அரசு, இறுதியில்,   23 நிபந்தனைகளுடன் அனுமதி  அளித்துள்ளது.

செப்.13-ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்ய அனுமதி கோரி அக்கட்சியின் நிர்வாகிகள் திருச்சி மாநகர காவல்துறையிடம் மனு கொடுத்தனர். அந்த மனுக்கள் மூன்று முறை நிராகரிக்கப்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து  தவெக தலைவர் விஜய் கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும் காவல்துறையின் எச்சரிக்கையை மீறி கூட்டத்தை கூட்ட முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. இதனால் அசம்பாவிதம் ஏற்படும் என்பதால், காவல்துறை  தவெகவினரை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது.

இதில் ரோடு ஷோ நடத்தக்கூடாது, மேளதாளம் போடக்கூடாது என 23 நிபந்தனைகளை விதித்து அனுமதி வழங்கி உள்ளது. காவல்துறையினரின் இந்த கெடுபிடிகள் இளைஞர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் 13–ந் தேதி சனிக்கிழமையன்று திருச்சியில் பிரச்சார பயணத்தை தொடங்குகிறார். தொடர்ந்து ஒவ்வொரு சனிக்கிழமையும் என 3 மாதங்களில் அனைத்து மாவட்டங்களுக்கும் பயணம் செய்கிறார். இதற்கான திட்ட விவரங்கள் காவல்துறையிடம் அளிக்கப்பட்டு அனுமதி கேட்கப்பட்டிருந்த நிலையில், காவல்துறை நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.

விஜய் வரும்போது பட்டாசு வெடிக்கக் கூடாது.

மேளதாளங்கள் இசைக்கக் கூடாது.

அனுமதியின்றி பிளக்ஸ் பேனர்கள் வைக்கக் கூடாது

கட்சித் தொண்டர்கள் மிக நீளமான குச்சிகளில் கொடியை கட்டி எடுத்து வரக் கூடாது.

ரோடு ஷோ செல்லக் ஊடாது.

வாகனத்தில் அமர்ந்தபடியேதான் வர வேண்டும்.

 சனிக்கிழமை நடைபெறும் பிரச்சாரத்தில் விஜய் 20 முதல் 25 நிமிடங்கள் மட்டுமே உரையாற்ற வேண்டும்.

திருச்சி பிரச்சாரத்தில் விஜய்யின் காருக்கு முன்னும் பின்னும் ஐந்து அல்லது ஆறு வாகனங்கள் மட்டுமே மொத்தமாக பின் தொடர்ந்து செல்ல வேண்டும்.

சென்னை புறவழிச்சாலை, டிவிஎஸ் டோல்கேட், தலைமை தபால் நிலையம், பாலக்கரை, காந்தி மார்க்கெட் வழியாக மரக்கடை வரும் விஜய், மீண்டும் காந்தி மார்க்கெட், அரியமங்கலம் பால்பண்ணை வழியாக சென்னை புறவழிச்சாலைக்கு சென்றுவிட வேண்டும்

குழந்தைகள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகளை அழைத்து வரக்கூடாது.

உயரமான கட்டிடங்கள், மரங்களில் ஏறி நிற்க தொண்டர்களுக்கு அனுமதி இல்லை.

பிரச்சாரத்தின்போது எந்த வித சட்ட ஒழுங்கு பிரச்சினையும் வரக்கூடாது.

பொதுமக்கள், வியாபாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது

மருத்துவ வசதிகள், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் அனைத்தும் அக்கட்சியினரே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.

பார்க்கிங் வசதிகளை அவர்களே ஏற்பாடு செய்ய வேண்டும்

என்பது உள்ளிட்ட 23 நிபந்தனைகளை திருச்சி மாநகர காவல்துறையினர் விதித்துள்ளனர்.

இதற்கு தவெக நிர்வாகிகள் ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டுள்ளனர்.

திருச்சி காவல்துறையினரின் கடுமையான கெடுபிடிகள் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. முதல்வர் ஸ்டாலின் இன்றுகூட ஒசூரில் ரோடுஷோ மேற்கொள்ளும் நிலையில், விஜய், வாகனத்தில் எழுந்து நின்றுகூட மக்களை பார்க்கக்கூடாது என்று கூறியிருப்பது,  ஆட்சியாளர்களுக்கு விஜய்-ன் வருகை கிலியை ஏற்படுத்தி இருப்பது ஊர்ஜிதமாகி உள்ளது.