சென்னை
திருச்சி என் ஐ டி விரைவில் பல்கலைக்கழகமாக மாற உள்ளதாக அதனியக்குநர் அகிலா தெரிவித்துள்ளார்.
திருச்சியில் உள்ள என் ஐ டி என அழைக்கப்படும் தேசிய தொழில்நுட்ப கல்வி நிலையம் அகில இந்தியப் புகழ் வாய்ந்ததாகும், தற்போது இந்த நிலையம் அகில இந்தியத் தொழில் நுட்பக் கல்வி மையத்தின் கீழ் இயக்குநர் அகிலாவின் தலைமையில் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் சென்னையில் நடந்த தேசிய கல்விக் கொள்கை கூட்டத்தில் கலந்து கொண்டு அகிலா உரையாற்றி உள்ளார்.
அப்போது அகிலா,
“தேசியக் கல்விக் கொள்கை என்பது தொழில் நுட்பத்துறையில் பல்வேறு கட்டங்களில் உள்ள திறமைகளை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. மேலும் இதற்காக பல்வேறு வகை பல்கலைக்கழகங்களை உருவாக்க தீர்மானம் செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் விரைவில் திருச்சி என் ஐ டி பல்கலைக்கழகமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு மாறினால் என் ஐ டி தொழில் நுட்பத்துறையில் ஒரு தனித்துவத்தைப் பெறும்.
ஏற்கனவே திருச்சி என் ஐ டி குழுவினர் தேசியக் கல்விக் கொள்கை மூலம் பல புதிய பாடத் திட்டங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்த புதிய பாடத்திட்டங்கள் மாணவர்களுக்கு கல்வி அறிவு மட்டுமின்றி அனுபவ அறிவையும் புகட்டும் வண்ணம் அமைக்கப்பட உள்ளன. குறிப்பாக இது பிஎச்டி மாணவர்களுக்கு மிகவும் உதவிகரமாக அமையும்.
திருச்சி என் ஐ டியில் முக்கியமாக வர்த்தகம் மற்றும் தொழில் தலைமை குறித்த படிப்புகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இதன் மூலம் மாணவர்களுக்குப் பல தொழிற்சாலை மற்றும் தொழில் முனைவோரின் அனுபவங்களைக் குறித்துத் தெரிந்து கொள்ள வாய்ப்பு உண்டாகும். மேலும் பல தொழில் முனைவோர் மாணவர்களுக்குத் தொழிற்சாலை நடத்துவதில் உள்ள நடைமுறைகள் குறித்தும் நேரில் விளக்கம் அளிக்க உள்ளனர்”
என உரையாற்றி உள்ளார்.