திருச்சி: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று (சனிக்கிழமை) தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்குவதற்காக திருச்சி வந்தடைந்தார். அவரை வரவேற்க கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால், மக்கள் வெள்ளத்தில் அவர் பிரசாரம் நடைபெறும் இடத்துக்கு வந்தடைந்தார்.
திருச்சி விமான நிலையத்தில் விஜய்க்கு தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்ததுடன், அவரது வாகனத்தையும், தவெக தொண்டர்கள் தொடரத் தொடங்கினர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தவெக கூட்டத்தினரால் திருச்சி திக்குமுக்காடி வருகிறது.

இதுதொடர்பாக ஏற்கனவே காவல்துறை தவெகவுக்கு பல்வேறு நிபந்தனைகளை அறிவித்த நிலையில், அதை எல்லாம் மீறி தொண்டர்கள் அதிகளவில் திரண்ட தால், விமான நிலையத்தில் இருந்து விஜய்யின் பிரச்சார வாகனம் ஊர்ந்து பிரசாரம் நடைபெற அனுமதி அளித்த பகுதிக்கு சென்றுகொண்டிருக்கினற்ன.
திருச்சி இன்று காலை திருச்சி காந்தி மார்க்கெட் காவல் சரகம் மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகே 10.35 மணிக்கு பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி யளிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் பிரச்சார இடத்துக்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 12மணி வரை அவர் அந்த இடத்தை அடைய முடியாத நிலை உள்ளது. தவெக தொண்டர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருப்பதால் அவர் நிகழ்விடத்துக்குச் செல்லவே இன்னும் பல மணி நேரம் ஆகும் என்று கூறப்படுகிறது.
திருச்சியில் தவெக தலைவர் விஜய் 30 நிமிடங்கள் மட்டுமே பேச வேண்டும் என காவல்துறை உத்தரவிட்டிருந்தது. மேலும், அவர் வேனில் இருந்துவெளியே தலைகாட்டக்கூடாது என்றும் நிபந்தனை விதித்தது. இதுமட்டுமின்றி, சென்னை புறவழிச்சாலை, டிவிஎஸ் டோல்கேட், தலைமை தபால் நிலையம், பாலக்கரை, காந்தி மார்க்கெட் வழியாக மரக்கடை வரும் விஜய், மீண்டும் காந்தி மார்க்கெட், அரியமங்கலம் பால்பண்ணை வழியாக சென்னை புறவழிச்சாலைக்கு சென்றுவிட வேண்டும். ஆனால், ‘ரோடு ஷோ’ நடத்த அனுமதியில்லை. விஜய்யின் வாகனத்துடன் மொத்தம் 5 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றெல்லாம் நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், தவெகவினரின் கட்டுக்கடங்காத கூட்டத்தில், காவல்துறையினர் செய்வது அறியாமல் திணறி வருகின்றனர்.

நேரம் செல்லச் செல்ல இந்தக் கூட்டம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஏற்கெனவே, விக்கிரவாண்டி, மதுரை என இரண்டு மாநில மாநாட்டை விஜய் பிரம்மாண்டமாக, வெற்றிகரமாக நடத்தி முடித்த நிலையில், அவருடைய இன்றைய சுற்றுப்பயணத்தில் இளைஞர்கள், பெண்கள் அதிகம் கூடியுள்ளனர். விஜய்யின் இன்றைய பயணத்தை தமிழகத்தின் பிரதானக் கட்சிகள் அனைத்துமே கவனத்தில் கொள்ளும் அளவுக்கு அவருக்கான ஆதரவு பளிச்சிட்டுக் கொண்டிருக்கிறது.
விஜய் ரோடு ஷோவுக்கு திமுக அரசு தடை விதித்த நிலையில், அவரது பிரசார வாகனம் இன்று செல்வது ரோடு ஷோ போலவே மெதுவாக சென்று கொண்டிருக்கிறது. அவரை காண சாலையின் இருபுறங்களிலும் ஏராளமானோர் கூடி உள்ளனர். சாலையோரங்களில் மேளதாளங்களுடன் வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக, சுற்றுப்பயணத்துக்கான இலச்சினையை தவெக நேற்று வெளியிட்டது. மேலும், அண்ணா, எம்ஜிஆருக்கு நடுவில் விஜய் இருப்பது போன்ற படமும் பேருந்தில் இடம்பெற்றுள்ளது.
தவெக தொடங்கப்பட்டு இதுவரை 2 மாநில மாநாடுகளை நடத்தியிருக்கும் விஜய், தற்போது முதல்முறையாக மக்களை சந்தித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். தனது முதல் பிரச்சாரத்தில் அவர் என்ன பேச போகிறார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.