சென்னை: முதல்வர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு விரைவில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட தவெக தலைவல் விஜய் இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்து, முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார். ஒருவர் இரு தொகுதிகளில் எம்எல்ஏவாக இருக்க முடியாது என்ற நிலையில், ஒரு தொகுதியை ராஜினாமா செய்தார். அதன்படி, திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். அவருடைய ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம், கடந்த 10-ம் தேதி முதல், திருச்சி கிழக்கு தொகுதியை காலியானதாக அறிவித்துள்ளது.

பொதுவாக, ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால், அடுத்த 6 மாதத்திற்குள் சட்டசபை தேர்தல் நடத்த வேண்டும். அந்த வகையில், நவம்பர் மாதத்திற்குள் திருச்சி கிழக்கு தொகுதிக்கு தேர்தல் நடத்தியாக வேண்டும். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், திருச்சி கிழக்கு தொகுதியில் முதலமைச்சர் ஜோசப் விஜய்யிடம் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தோல்வியை தழுவி இருந்தார்.

இந்த நிலையில் முதல்வர் விஜய் ராஜினாமாவை தொடர்ந்து,  தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்  திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]