திருச்சி: இன்று மாலை திருச்சியில் நடைபெறும் திமுக மாநாடு, மாநாடு தி.மு.க.வுக்கு திருப்புமுனையாக அமையும் அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
திருச்சி மாநாடு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நேரு, திருச்சியில் 4 லட்சம் பேருக்கு சுடச்சுட சாப்பாடு தயார் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், திருச்சி திமுக மாநாட்டிற்காக 3 லட்சம் இருக்கைகள் போடப்பட்டுள்ளது. வெளியூர்களில் இருந்து வருகை தரும் 4 லட்சம் பேருக்கு உணவு தயாரிக்கப்பட்டு சுடச்சட வழங்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகள் உள்பட மத்திய மண்டத்தில் உள்ள 41 தொகுதிகளிலும் இந்தத் தேர்தலில் தி.மு.க. நிச்சயம் வெற்றி பெறும். திருச்சி மாநாடு திமுகவுக்கு திருப்புமுனையாக அமையும் என்றவர் இது போன்ற மாநாடுகளைத் தொடர்ச்சியாக நடத்துவதன் மூலம் தலைவருக்கு கட்சி நிர்வாகிகளை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைப்பதோடு, அவர்களுக்கு கட்சியின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து புதிய உத்வேகமும் கிடைக்கும் என்றார்.
திருச்சி சமயபுரம் அருகே சிறுகனூரில் நடைபெறும் தி.மு.க.வின் 12-வது மாநில மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 10 லட்சம் பேர் கலந்து கொள்கிறார்கள். மாநாடு சரியாக பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது. வெளி மாவட்டங்களை சேர்ந்த தொண்டர்கள் நேற்று இரவு முதல் பல்வேறு பகுதிகளில் இருந்து பஸ், வேன், கார்களில் மாநாட்டுத் திடலில் குவிந்தனர். இதனால் முன்னேற்பாடாக வெளியூர்களில் இருந்து வருகை தரும் தொண்டர்களின் பசி போக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
தி.மு.க. முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு ஆலோசனையின் படி 4 இடங்களில் 2 லட்சம் பேருக்கு சுடச்சுட சிக்கன் பிரியாணி மற்றும் சிக்கன் கிரேவி ஆகியவை காலையிலிருந்து மாநாட்டு திடல் உணவுக்கூடத்தில் தயார் செய்யப்பட்டது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். பின்னர் அந்த உணவுகளை முறையாக பொட்டலமாக மடித்து மாநாட்டு திடலுக்கு கொண்டு சென்றனர். அங்கு ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த சிறப்பு உணவு கூடங்களில் தொண்டர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.
மேலும் உணவுப் பொட்டலங்களுடன் குடிநீர் பாட்டில்களும் வழங்கப்பட்டன. இதனால் வெளியூர் தொண்டர்கள் பசியாறி மகிழ்ந்தனர்.
[youtube-feed feed=1]