திருச்சி மாவட்டம், வெள்ளூர்,  திருக்காமேஸ்வரர் ஆலயம்.

வேறெங்கும் காணாத வகையில் வில்வமர நிழலில் ஐஸ்வர்ய மகுடத்துடன் கோயிலின் குபேர பாகத்தில் தவம் செய்யும் கோலத்தில் அலைமகளாம் ஐஸ்வர்ய மஹாலட்சுமி அற்புத திருக்கோலத்தில் வீற்றிருக்கின்றாள்.

இவ்வாலயமானது கி.பி. ஆறாம் நூற்றாண்டில் முதலாம் விஜயாதித்த சோழனால் புனரமைக்கப்பட்டு, குடமுழுக்கு நடைபெற்றது என்றுதான் ஆலயக்கல்வெட்டு கூறுகின்றது. ஆலயத்திற்கு தெற்கு வாசல், கிழக்கு வாசல் என்று இரு நுழைவாயில்கள் உள்ளன.

பலிபீடம், நந்திதேவர், திருமாளிகைப்பத்தியுடன் கூடிய பிராகாரம். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, விஷ்ணு துர்கை ஆகிய தெய்வங்கள் உள்ளன.

விநாயகர், வள்ளி-தெய்வானையுடன் கூடிய சுப்ரமண்யர், சண்டிகேஸ்வரர், நவக்கிரகம் போன்ற சன்னதிகள் அமைந்துள்ளன.

தல புராணத்தைச் சொல்லும் முசுகுந்தனின் சிவ வழிபாடு, ரதியும் மன்மதனும் இணைந்து ஈசனை வணங்கும் கோலம் போன்றவை சிற்பமாகக் காணப்படுகின்றன.

திருவிழா:

பிரதோஷம், சிவராத்திரி

தல சிறப்பு:

இத்தல சிவனை மகாலட்சுமி பிரதிஷ்டை செய்து வழிபட்டிருப்பது சிறப்பு.

தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் செய்யும் தொழிலில் இருப்பவர்கள் வந்து வணங்குவதற்கு ஏற்ற திருக்கோயில் இது.

தங்கம், வெள்ளி நகைகள் செய்வதால் தோஷம் ஏற்படுவதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன.

அந்தத் தோஷங்களை அகற்றுவதற்கு இந்த ஆலயம் வந்து வழிபடுவது சிறப்பு.

பிரார்த்தனை:

தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் செய்யும் தொழிலில் இருப்பவர்கள் வந்து வணங்குவதற்கு ஏற்ற திருக்கோயில் இது. தங்கம், வெள்ளி நகைகள் செய்வதால் தோஷம் ஏற்படுவதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன.

அந்தத் தோஷங்களை அகற்றுவதற்கும், போகத்திற்கு அதிபதியான சுக்ரன் ஜாதகத்தில் சரியாக இல்லையெனில் எவ்வளவு பெரிய கோடீஸ்வரராக இருந்தாலும் காரியத்தடையும், மனக்குழப்பமும், பொருளாதார வீழ்ச்சியையும், திருமணத் தடையும், குழந்தையின்மையும், வியாபார வீழ்ச்சியையும் ஏற்படுத்துவார்.

எனவே, சுக்கிரதோஷம் நீங்கிட சுக்கிரனுக்கு அதிபதியான மஹாலக்ஷ்மியை சுக்ர ஹோரையில் இங்கு வந்து ஐஸ்வர்ய மகாலட்சுமிக்கு அபிஷேகம் செய்து வழிபடலாம்.

திருமணம் நல்லபடியாக நடப்பதற்கு ஜாதகம் வைத்துப் பிரார்த்தனை செய்கிறார்கள்.

குழந்தை பாக்கியத்திற்கும் இங்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது.

இழந்த தன் கணவனை ரதிதேவி திரும்பப் பெற்ற திருத்தலம் என்பதால் தம்பதியர் இங்கே வந்து வணங்கினால் ஒற்றுமை மேலோங்கும்.

மாங்கல்ய பலம், திருமணத் தடை, ஐஸ்வர்ய யோகம், பிரிந்த தம்பதியர் இணைவதற்கு என்று மிகச் சிறந்த பரிகாரத் தலமாக விளங்குகிறது.

நேர்த்திக்கடன்:

சுக்கிரவாரமான வெள்ளிக்கிழமையில் சுக்கிர ஹோரையான, விடியற்காலை 6 முதல் 7 மணிக்குள் 16 வகையான அபிஷேகம் செய்து 16 நெய்தீபம் ஏற்றி, 16 செந்தாமரை மலர்கள் சாத்தி, வில்வமரத்தோடு சேர்த்து 16 முறை வலம் வந்தால் அனைத்து தோஷங்களும் நீங்கி, வாழ்வில் ஐஸ்வர்யம் பெருகி சந்தோஷமாக வாழலாம்.

அத்துடன் இங்குள்ள சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.